அரசியலில் கர்ம வினைப்பயனெல்லாம் கிடையாது? நிலாந்தன்

0
235
Article Top Ad

“நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட காணி சென்னைக்கு அருகே விற்பனைக்கு உண்டு” இது ஒரு விளம்பரம் அல்ல. அண்மை நாட்களில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஒளிப்படத்துடன் சேர்ந்து பகிரப்படும் ஒரு குறிப்பு இது. அந்த ஒளிப்படத்தில் என்ன இருக்கிறது என்றால், இந்தியப் பிரதமர் மோடிக்கு முன் பசில் ராஜபக்ச பவ்வியமாக அமைந்திருக்கும் காட்சியாகும்.

வழமைபோல இந்தியா இம்முறையும் நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியா இலங்கைக்கு வழங்கிவரும் கடன்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மூச்சுவிடும் அவகாசத்தை வழங்கியிருக்கின்றன. அதற்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் சம்பூரில் மீளப்புதுப்பிக்கும் மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்கு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல மன்னாரிலும் பூநகரியிலும் இரு வேறு மீளப்புதுப்பிக்கும் மின்சக்தி திட்டங்களை உருவாக்க இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியா அவசரத்துக்கு கடனைக் கொடுத்து இலங்கைத் தீவின் மீது தனது பிடியை இறுக்கி வருகிறது என்று பொருள்.

இனப்பிரச்சினையில் இந்தியாவை மீண்டும் தலையிடக்கோரி ஆறு தமிழ் கட்சிகள் அன்மையில் இந்தியாவுக்கு கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கும் பின்னணியில் இப்புதிய நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை முன்வைத்து மேற்படி கட்சிகளை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள், இந்தியா மீண்டும் தன்னுடைய பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் செயற்பட்டு வருகிறது என்று.

அதுதான் உண்மை. இந்தியா மட்டுமல்ல சீனாவும் சரி அமெரிக்காவும் சரி ஏன் ஐநாவும் சரி ஏதோ ஒரு அரசியல் இலக்கை முன்வைத்து அதற்குரிய நிகழ்ச்சி நிரலின்படி தான் இலங்கை தீவை அணுகும். அரசியலில் எல்லாமே நலன்சார் உறவுகள்தான். தூய புனிதமான உறவுகள் என்று எதுவும் கிடையாது. எல்லா உறவுகளும் ராணுவ, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலானவைதான்.

உதாரணமாக சீனாவின் உதவிகளை எடுத்துக்கொள்வோம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு மெய்நிகர் சந்திப்பின்போது பேராசிரியர் அமிர்தலிங்கம் அதனைச் சுட்டிக் காட்டினார். சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் சீனாவைத் தமது நட்பு நாடாக கருதுகிறார்கள். ஆனால் சீனா ஒரு நண்பனாக இலங்கைக்கு உதவவில்லை. அப்படி உதவியிருந்திருந்தால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு எழுதி வாங்கியிருக்காது.நண்பர்களுக்கு கொடுக்கும் கடனை அறவிடும் பொழுது அதற்கு பதிலாக – ஈடாக – காணியை நகையை கேட்பது நட்புக்கு அழகு அல்ல.எனவே சீனா ஹம்பாந்தோட்டை விடயத்தில் ஒரு நட்பு நாடாக நடக்கவில்லை. அது தனது ராணுவ பொருளாதார அரசியல் இலக்குகளை முன்வைத்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எழுதி வாங்கிக் கொண்டது. இதுதான் அரசியல். இதுதான் அரசியல் பொருளாதாரம்.

சீனா மட்டுமல்ல அமெரிக்காவும் அப்படித்தான். கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வரும்பொழுது அமெரிக்காவுடனான மில்லினியம் சலேன்ச் உடன்படிக்கையை ரத்து செய்வேன் என்று சிங்கள மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் இந்தியாவுக்கு முதலில் விஜயம் செய்தார்.அப்பொழுது இந்தியா அவருக்கு ஒரு தொகுதி பணத்தைக் கடனாக வழங்கியது. அது மில்லினியம் சலேன்ச் உடன்படிக்கையின் கீழ் வழங்கப்படவிருந்த நிதி உதவிக்கு கிட்ட வருகிறது. இது தொடர்பாக ஒரு சுயாதீன ஊடகவியலாளர் அமெரிக்க இராஜதந்திரி ஒருவருடன் உரையாடும் பொழுது “நீங்கள் கொடுக்க விரும்பிய தொகைக்கு ஈடான ஒரு தொகையை இந்தியா வழங்கி இருக்கிறதே” என்று சுட்டிக்காட்டினார். அந்த ராஜதந்திரி சிரித்துக்கொண்டே சொன்னார் “இந்தியா கொடுப்பது கடன் நாங்கள் கொடுக்க முன்வந்தது நன்கொடை” என்று. அதற்கு அந்த ஊடகவியலாளர் மீண்டும் கேட்டார் “மில்லினியம் சலேன்ச் உடன்படிக்கை எனப்படுவது நாட்டுக்கு பாதகமானது என்று அரசாங்கம் கூறுகிறது. நாட்டில் உள்ள காணிகளின் உரிமை யார் யாருக்கு உண்டு என்பது தொடர்பான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தகவல்களை அமெரிக்கா கேட்பதாக அவர்கள் கூறுகிறார்கள்” என்று அதற்கு அந்த ராஜதந்திரி திருப்பிக் கேட்டார் “அதில் என்ன தவறு? உலகம் முழுவதும் மில்லினியம் சலேன்ச் உடன்படிக்கை எனப்படுவது அவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது” என்று. ஒரு சிறிய நாட்டின் காணி உரிமையாளர்கள் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை ஒரு பெரிய நாடு தன்னிடம் தருமாறு கேட்கிறது என்பதே ராணுவ பொருளாதார அரசியல் நலன் சார்ந்த நோக்கு நிலையில் இருந்துதான்.

எனவே ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உதவி செய்யும் பொழுது அதில் அறநெறிகள் தர்மம் என்பவற்றை விடவும் நலன் சார்ந்த பேரங்கள்தான் அதிகம் இருக்கும். ராஜதந்திரத்தின் இந்த பால பாடத்தை ஈழத்தமிழர்கள் கற்றுத் தேற வேண்டும். இந்த பூமியில் எந்த ஒரு அரசும் அல்லது அரசு சார்பற்ற நிறுவனமும் ஏனைய நிறுவனங்களோடு அல்லது அரசுகளோடு கொள்ளும் உறவென்பது நலன்சார் அடிப்படையில்தான் அமையும்.

இதில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியா இப்பிராந்தியத்தை தன்னுடைய செல்வாக்கு மண்டலமாக -spear of influence- நம்புகின்றது. ரஷ்யா உக்ரேன் உட்பட போல்கன் நாடுகளை எப்படி பார்க்கின்றதோ அப்படி. எனவே இப்பிராந்தியத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு வழங்க கூடிய எந்த ஒரு தீர்வையும் இந்தியா ஈழத் தமிழர்களின் நோக்கு நிலையிலிருந்து அணுகாது. தன்னுடைய பிராந்திய புவிசார் நோக்கு நிலையில் இருந்தே அணுகும்.

இது விடயத்தில் ஈழத் தமிழர்கள்தான் தமது நலன்சார் நோக்கு நிலையிலிருந்து தமது கோரிக்கைகளை உச்சமாக முன்வைக்க வேண்டும். அவற்றுக்காக போராட வேண்டும். அவற்றுக்காக பேரம் பேச வேண்டும்.

பேரம் பேசத் தேவையான பலத்தை அதிகப்படுத்த வேண்டும். பேரம் பேசுவது என்றால் முதலில் ஈழத்தமிழர்கள் ஒரு பல மையமாக -power source- ஆக மாறுவதுதான். அரசியலில் அதிக மக்கள் ஆணையை பெற்ற ஒரு கட்சிதான் அதற்கான அடிப்படைகளைக் கொண்டிருக்கும். கூட்டமைப்புக்கு உள்ள அடிப்படை பலம் அதுதான். கூட்டமைப்பின் இராஜதந்திர நடைமுறைகளை அல்லது ஆறுகட்சிகள் இந்தியாவுக்கு கடிதம் எழுதியதை தவறு என்று கருதும் ஏனைய கட்சிகள் தாம் எப்படி ஒரு பல மையமாக மாறுவது எப்படி என்று சிந்திக்க வேண்டும். அதன் மூலம்தான் அவர்கள் தாங்கள் மனதில் வைத்திருக்கும் ராஜதந்திர வழி வரைபடத்தை நடைமுறைப்படுத்தலாம். ராஜதந்திரம் எனப்படுவது இரண்டு பல மையங்களுக்கு இடையிலான இடையூடாட்டம்தான். சிறிய கட்சிகள் எல்லாவற்றையும் எதிர்க்கலாம். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு அவர்கள் ஒரு பல மையமாக மாற வேண்டும்.

இப்பூமியானது தர்மத்தின் அச்சில் சுற்றுவதில்லை. அறநெறிகள் கர்ம வினைப் பயன்கள் போன்றன நவீன அரசியலில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அண்மை வாரங்களாக தென்னிலங்கையில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை குறித்து தமிழர்களில் ஒரு பகுதியினர் சமூக வலைத்தளங்களில் பகிரும் செய்திகளை பார்த்தால், அறநெறிகள் கர்ம வினைப்பயன் போன்றவற்றுக்கு ஊடாகவே அவர்கள் அரசியலை விளங்கிக் வைத்திருப்பதாக தெரிகிறது. எந்த ராஜபக்சக்கள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்தார்களோ, அதே ராஜபக்சவை வீட்டுக்கு போ என்று சிங்கள மக்கள் கேட்கிறார்கள். எந்த ராஜபக்சக்கள் தமிழ் மக்களை தோற்கடித்த பொழுது சிங்கள மக்கள் கிரிபத் சமைத்து கொண்டாடினார்களோ,அதே ராஜபக்சவை வீட்டுக்கு போ என்று கேட்டு சவப்பெட்டி, பாண் போன்றவற்றை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எந்த ராஜபக்ச போன்ற ஒரு இரும்பு மனிதர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று விரும்பி அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்களோ, அவரையே வீட்டுக்கு போ என்று கேட்கிறார்களாம்.

இவற்றையெல்லாம் பார்த்து ஒரு பகுதி தமிழ்மக்கள் கர்மவினைப்பயன் அதுவென்று கூற முன்வருகிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு இழைத்த குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது என்று கூறி பழி வாங்கியவனுக்கு உண்டாகும் திருப்தியோடு அக்காட்சிகளை ரசிக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி என்பது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் சேர்த்துத்தான். தவிர இதில் கர்ம வினைப்பயன் என்பதெல்லாம் கிடையாது. அரசியலை அப்படி அப்பாவித்தனமாக விளங்கிக் கொள்ள தேவையில்லை. ராஜபக்சக்கள் மறுபடியும் யுத்த வெற்றியை கையில் அடுத்து நிலைமைகளைத் தலைகீழாக்க முடியும்.

எனவே தமிழ் மக்கள் கர்ம வினைப்பயன் போன்ற அறம் சார்ந்த மதம் சார்ந்த சிந்தனைகளுக்கூடாக அரசியலை அப்பாவித்தனமாக விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக நலன்சார்ந்த பேர அரசியலுக்கு ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற அடிப்படை விதியை கற்றுக்கொள்ளவேண்டும். கடந்த பல தசாப்த கால அரசியல் தமிழ் மக்களுக்கு போதிப்பது அதனைதான்.

நன்றி – Athavannews.com