பதிலடியை ஆரம்பித்தது மொட்டுக் கட்சி – முடிந்தால் ஆட்சியைக் கவிழ்க்குமாறு பகிரங்கமாக சவால்

0
160
Article Top Ad
அரசின் இருப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. ஆளுங்கட்சி பலமான நிலையிலேயே உள்ளது. முடிந்தால், சாதாரண பெரும்பான்மையை சவாலுக்கு உட்படுத்திக் காட்டுங்கள் என்று விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 11 கட்சிகளின் அணிக்கு ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பகிரங்க சவால் விடுத்துள்ளது.
அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர், இந்த அரசின் சாதாரண பெரும்பான்மை (113) ஆசனங்கள் விரைவில் இல்லாது செய்யப்படும் என அறிவிப்பு விடுத்துள்ளதுடன், அதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் விவரித்து வருகின்றனர்.
அரசிலிருந்து இன்னமும் 12 பேர் வெளியேறினால் சாதாரண பெரும்பான்மை ஆட்டம் கண்டுவிடும், ஆனால் 12 இற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற தயாராகவே உள்ளனர் எனவும், தகுந்த நேரம் வரும்போது அதற்கான நகர்வு முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மேற்படி அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
அவ்வேளையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் இவ்வாறு சவால் விடுத்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியவை வருமாறு,
அரசின் நாடாளுமன்ற அணி பலமாகவே உள்ளது. எம்பக்கம் உள்ளவர்கள் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது. அரசின் திட்டங்களை அவர்களும் நம்புகின்றனர். எனவே, பலமான அரசாக இந்த பொருளாதார சவாலை வெற்றிகொள்வோம். அடுத்த தேர்தலில் வெற்றிநடையும் போடுவோம். சூழ்ச்சிக்காரர்கள் வெளியேறிவிட்டனர். அங்கும், இங்கும் சென்று ஒப்பாரி வைக்கின்றனர்.
முடிந்தால் 113 என்ற சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்யுமாறு சவால் விடுக்கின்றோம். அது அவர்களால் முடியாது. நாம் கெஞ்சப்போவதும் இல்லை. பலம் பொருந்திய தலைவரான பஸில் ராஜபக்சவை வீழ்த்துவதற்கே முற்படுகின்றனர். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என்றனர்.