33 இலட்சம் மக்களுக்கு மேலதிக கொடுப்பனவு

0
136
Article Top Ad
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குதற்கு அமைச்சரவையில் நேற்று முன்தினம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் மூலம் குறைந்த வருமானங் கொண்ட 33 இலட்சம் மக்கள் நன்மையடையவுள்ளனர்.
இதற்கமைவாக முதியோருக்கு தற்போது வழங்கப்படும் ரூபா இரண்டாயிரம் ரூபா 5 ஆயிரம் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேபோன்று 100 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூபா 5 ஆயிரத்திலிருந்து ரூபா 7 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த உதவித் தொகையைப் பெற எதிர்பார்த்திருப்போருக்கு ரூபா 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
ஊனமுற்றோருக்கு தற்போது வழங்கப்படும் ரூபா 5 ஆயிரம் ரூபா 7 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த உதவித் தொகையை எதிர்பார்த்திருப்போருக்கு ரூபா 5 ஆயிரம் வழங்கப்படும்.
சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் ரூபா 5 ஆயிரம் ரூபா ,7 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இதனை எதிர்பார்த்திருப்போருக்கு ரூபா 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)