Jurassic World Dominion படம்: ஊடகங்கள் பார்வையில் எப்படி?

0
447
Article Top Ad

நடிகர்கள்: க்ரிஸ் ப்ராட், ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், லாரா டெர்ன், ஜெஃப் கோல்ட்ப்லம், சாம் நீல்; ஒளிப்பதிவு: ஜான் ஸ்வார்ட்ஸ்மேன்; இயக்கம்: காலின் ட்ரெவர்ரோ.

2018ஆம் ஆண்டில் வெளிவந்த Jurassic World: Fallen Kingdom படத்தின் அடுத்த பாகமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் Jurassic World Dominion. ஜுராசிக் வேர்ல்ட் முப்பட வரிசையில் கடைசிப் படமும் இதுதான். தற்போது இந்தத் திரைப்படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்த விமர்சனங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்களின் பார்வையிலும் விமர்சகர்களின் பார்வையிலும் இந்தப் படம் எப்படியிருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

“இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல… எல்லா உயிரினங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த உலகத்துல நம்மளும் ஒரு பகுதிதான்’ என்ற வசனம் படத்திலிருந்து வெளியே வந்தபிறகும் மனதில் தேங்கிவிடும்” வகையில் இந்தப் படம் இருப்பதாக தமிழ் இந்துவின் விமர்சனம் கூறுகிறது.

“மனிதர்களும் டைனோசர்களும் ஒருங்கே வாழும் பயோசின் சரணாலயத்தில் உலகம் முழுக்க உணவு வறட்சியை ஏற்படுத்தும் வகையிலும் வெட்டுக்கிளிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதன் டிஎன்ஏ மாதிரியை கைப்பற்ற பயோசின்னுக்குள் டாக்டர் எல்லிசாட்லரும் டாக்டர் ஆலனும் நுழைகின்றனர்.

மற்றோரு புறத்தில் ஓவனும் கிளாரியும் கடத்தப்பட்ட தங்களது மகளை மீட்க பயோசின்னுக்குள் நுழைகின்றனர்.

பயோசின்னுக்குள் நுழைந்த இந்த இரண்டு தரப்பினரில் லட்சியமும் நிறைவேறியதா, அவர்கள் எப்படி வெளியேறினர் என்பதற்கான விடைகளை சிறந்த காட்சியனுபவத்துடன் சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் ‘ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன்'” என இந்தப் படத்தின் கதையைப் பற்றிக் கூறுகிறது தமிழ் இந்து.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தப் படம் வழக்கமான ஒன்றுதான். ஏற்கனவே நன்றாக ஓடிய ஒரு திரைப்படத்தை வைத்துக்கொண்டு அடுத்தடுத்து முடிந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைக்கும் ஹாலிவுட் தொடர் திரைப்படங்களைப் போலவே இந்தப் படமும் அமைந்திருக்கிறது என்கிறது First Post இணையதளம்.

ஜுராஸ்ஸிக் பிக்சர்ஸ்

பட மூலாதாரம்,UNIVERSAL STUDIOS

“படத்தின் துவக்கம் ஒரு சோகமான சஸ்பென்ஸ் திரைப்படத்தைப் போல இருந்தாலும், நாயகனும் நாயகியும் மால்டா, இத்தாலி என பயணிப்பதால், இண்டியானா ஜோன்ஸ் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு வந்துவிடுகிறது. பார்வையாளர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமென நினைத்திருக்கிறார்கள். ஆனால், அதை எப்படிச் செய்வதெனத் தெரியாமல் ஏதேதோ நடக்கிறது. ஜுராசிக் படங்களில் உச்சகட்ட காட்சியில், டைனசர்கள் தங்களுக்குள் சண்டையிடுவது குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படி நடந்தாலும், பார்வையாளர்களுக்கு அதன் மீதான ஆர்வமே போய்விடுகிறது” என்கிறது First Post.

“25 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ஜுராசிக் பார்க் படத்தின் காட்சிகள் இப்போதும் நினைவில் இருக்கும் நிலையில், இப்போது வெளிவரும் ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் காட்சிகள் சுத்தமாக நினைவிருப்பதில்லை. படம் சம்பந்தப்பட்டவர்களும் இதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒரிஜினல் ஜுராசிக் படத்தில் நடித்தவர்களை இந்த் படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார்கள்” என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

“இது ஜுராசிக் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 1990களில் வந்த படத்தில் இருந்த நடிகர்களைத் திரும்பக் கொண்டுவந்திருப்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், முடிவில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் படமாகவே முடிந்திருக்கிறது. உண்மையான ரசிகர்களை உற்சாகப்படுத்த விரும்பினாலும் அது நடக்கவில்லை. காரணம் பாத்திரங்கள் சோர்வடைந்தவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். எல்லா காட்சிகளும் எதிர்பார்க்கும்வகையிலேயே இருக்கிறது. தோல்வியடைந்த ஒரு நினைவெழுச்சிப் பயணமாக இதைச் சொல்லலலாம். டைனசர்களை ரொம்வும் பிடிக்குமென்றால் ஒரு தடவை பார்க்கலாம்” என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

நன்றி – பிபிசி தமிழ்