பொருளாதார நெருக்கடி இன்னமும் 50 சதவீதத்தைக் கூட எட்டவில்லை. ரம்புக்கனையில் ஏற்பட்டது போன்ற கலவரங்கள் வெடிக்கலாம்- வங்குரோத்தான சர்வதேச நாடுகளின் உதாரணங்களைக் காண்பித்து பிரபல நிதியியல் ஊடகவியலாளர் ஷிஹார் அனீஸ் எச்சரிக்கை

0
166
Article Top Ad

இலங்கை மக்கள் எதிர்காலத்தில் முகங்கொடுக்கவுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் 50 சதவீதத்தைக்கூட நாம் இன்னமும் எட்டவில்லை. ஆனால், தற்போதே மக்கள் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். பணவீக்கம் மேலும் உச்சமடையும் போது பாரிய அளவில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அத்தருணத்தில் மக்கள் பொறுமையை இழந்து வன்முறைகள் மற்றும் கலவரங்களில் ஈடுபடும் நிலைமை உருவாகலாமென இலங்கையின் மூத்த நிதியில் ஊடகவியலாளர் ஷிஹார் அனீஸ் ‘குளோப் தமிழ் ’ இணையத்துக்கு தெரிவித்தார்.

நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்பாட போகும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் 45 சதவீதத்தைக்கூட நாம் இன்னமும் கடக்கவில்லை. பொருளாதார நெருக்கடியின் ஆரம்பகட்டத்திலேயே இன்னமும் இருக்கின்றோம். ஆனால், இந்த நிலைமையைக்கூட மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை. மேலும் இந்த நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையும்.

அரசாங்கத்திற்கு வருமானம் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ள வறுமையான மக்களுக்கான நிவாரணத்தை வழங்க முடியவில்லை. இதன் தாக்கம்தான் எதிர்வரும் நாட்களில் பாரிய போராட்டங்களாகவும் கலவரங்களாகவும் வெடிக்கும். ஒருபுறத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள பணம் இல்லாத சூழல் உள்ளது. மறுபுறம் பணம் இருந்தும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் காணப்படுகிறது. இது ஆரம்பக்கட்டம்தான். ரம்புக்கனை கலவரம் போன்று வரும் நாட்களில் போராட்டங்கள் உச்சடையும்.

பொருளாதார நெருக்கடியின் அடையாளங்களாகதான் அண்மைய நாட்களில் பதிவாகும் சம்பவங்கள் அமைந்துள்ளன. வரிசைகள் அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் மக்கள் பொறுமையை இழந்து வன்முறையின் உச்சக்கட்டத்திற்கு செல்லலாம். பெற்றோல், டீசல், மண்ணெண்னை, அத்தியாவசிய பொருட்கள் போதைமை, எரிவாயு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். அதேபோன்று டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்;ச்சியும் உச்சம் தொட்டுள்ளது. ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடையும் போது பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும். மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது தற்கொலைகளும் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சினைக்கான முறையான தீர்வு இன்னமும் காணப்படாத சந்தர்ப்பத்தில் உள்ளமையால் நிலைமைகள் மேலும் மோசமடையும்.

சொகுசு வாகங்களில் பயணிக்கும் அல்லது நாட்டில் செல்வந்தவர்களாக இருக்கும் தரப்பினருக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் இதுவரை ஏற்படவில்லை. எரிபொருள், எரிவாயும் அல்லது அத்தியாவசியப் பொருட்;களை பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளை அவர்கள் பாவிக்கின்றனர். பணம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களும் இடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இலங்கையின் வளங்களில் 90 சதவீதமானவை நாட்டின் 10 சதவீதமான மக்களிடமே உள்ளன.
தற்போதைய சூழலில் கீழ் மட்டத்தில் உள்ள மக்கள் அதிக சம்பளத்தை பெறுபவர்களாகவும் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் அதனை வழங்குவதாகவும் இருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யாத பட்சத்தில் அரசாங்கம் தலையிட்டு வரிமூலம் அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அண்மையில் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட தம்பிக்க பெரேரா அவருக்குச் சொந்தமான கெசினோவுக்கு வரியை செலுத்தியிருக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்தான் செலுத்தியுள்ளார். அவர் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். ஆனால், வறுமையான மக்களிடம் பல்வேறு வரிகளை விதித்து பணத்தை அரசாங்கம் சுரண்டுகிறது. இலங்கையின் முதலாவது அல்லது இரண்டாவது செல்வந்தர் எனக் கருத்தப்படும் நபரே வரியை செலுத்தாத வகையில்தான் நாட்டின் வரிச்சட்டங்கள் உள்ளன. ஏனைய செல்வந்தவர்களின் நிலையும் அதுதான். அரசாங்கத்தின் கொள்கை ரீதியான பிரச்சினையின் காரணமாகத்தான் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் அல்லது ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள 4 சதவீத பண வீக்கம் என்பது மிகப்பெரிய தொகையாக கருதுகின்றனர். ஆனால், இலங்கையில் உத்தியோகப்பூர்வ தரவுகளின் பிரகாரம் பணவீக்கம் 50 சதவீதத்ததை தாண்டியுள்ளது. உத்தியோகப்பூர்வமற்ற தரவுகளின் பிரகாரம் 130 சதவீதத்தை பணவீக்க வீதம் கடந்துள்ளதாக பிரித்தானியாவின் பிரபல பொருளியல் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தைவிட தமது செலவுகள் 4 சதவீதம் கூடுவதற்கும் 130 சதவீதம் கூடுவதற்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது.

70 ரூபாவில் இருந்த அரிசி தற்போது 250 ரூபா, 60 ரூபாவுக்கு இருந்த பாண் 160 ரூபா, இறைச்சி, மரக்கறிகள் என அனைத்து விடயங்களும் பணவீக்கத்துடன் தொடர்புடையவையாகும். ஆனால், ஏனைய நாடுகளில் 4 சதவீதமே பெரிய விடயமாகவுள்ளது.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள நடவடிகைக்ககைளில் பிரதானமானது சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமையாகும். ஏனைய செயல்பாடுகள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டமையாகும். மற்றுமொரு பிரதான நடவடிக்கை அரச உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையை குறைப்பதாகும். இதுவொரு நல்ல விடயமாகும். அரச உத்தியோகஸ்தர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் அல்லது இலங்கையில் தனியார்துறையில் பணியாற்றவும் சந்தர்ப்பம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்தச் செயல்பாட்டை முன்னெடுக்க எண்ணியுள்ளனர். ஆனால், நத்தை வேகத்தில்தான் இதற்கான பணிகள் நடைபெறுக்கினறன.

ரணில் பிரதமரானது வரிசைகள் குறைய போகிறது, பெற்றோல் கிடைக்கும். முதலீடுகள் நாட்டை நோக்கிவரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. இலங்கையில் பொருளாதார கொள்கையில் பிரச்சினை உள்ளது. ஏற்றுமதி வருமானம் இல்லை. முறையான பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படும்போதுதான் சர்வதேச நாடுகள் உதவியளிக்கும் என்றார்.