கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்களை ஏற்க இன்று (ஜூலை 19) காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது.
1981 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக சபையில் வாக்கெடுப்பு நடத்துவதற்காக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் வேட்பாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
இன்று வேட்புமனுக்களை ஏற்றுகொண்ட பின்னர் வாக்கெடுப்பு நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட நான்கு முன்னணி வேட்பாளர்கள் நாட்டின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் ஏற்கனவே களமிறங்கியுள்ளனர். SLPP பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடும் ஏனைய மூன்று பேரில் உள்ளனர்.
அவர்களில் மூத்தவரான பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 1970களின் நடுப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தி தீவிர அரசியலில் இறங்கினார். அவர் 1977 இல் பாராளுமன்றத்தில் நுழைந்தார். விக்கிரமசிங்க 1994 முதல் யூ.என்.பி.யின் தலைவராக இருந்து வருகிறார். 73 வயதான அவர் ஒரு தடவைகூட பதவிக் காலத்தை நிறைவு செய்யாத போதிலும் 6 முறை பிரதமர் பதவியை வகித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2000ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். 2001ஆண்டு சுகாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 55 வயதான அவர் 2019 தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிட்டார். அவர் 2020 பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்கினார். எவ்வாறாயினும், 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தனித்தனியாகப் போட்டியிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதற்கிடையில், 1994 இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட SLPP எம்.பி அழகப்பெரும, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் அமைச்சராக பணியாற்றினார். தற்போது அவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக அமர்ந்துள்ளார்.
அழகப்பெரும கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததையடுத்து, SLPP தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர் குறித்து பிளவுபட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பதில் ஜனாதிபதி விக்ரமசிங்கவை வெளிப்படையாகவே ஆமோதித்தார், அதேவேளை கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், SLPP கட்சியின் சொந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதேவேளை, 2000ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திவரும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி உள்ளார்.