9 ஆவது பாராளுமன்றில் மூன்றாவது அமர்வு!

0
98
Article Top Ad

9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று (03) முற்பகல் 10.30ற்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இன்றைய தினம் நிகழ்வில் வழமையாக மேற்கொள்ளப்படும் சிறப்பு மரியாதை பீரங்கி வேட்டுக்கள் இடம்பெற மாட்டாது. அத்துடன் ஜனாதிபதியின் கொடி ஏற்றப்பட மாட்டாது. தேசியக்கொடி மாத்திரமே பறக்க விடப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ,கடந்த மாதம் 28 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரைக்கு அமைய அவருக்குரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கமைவாக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.

அரசியலமைப்பின் 33 உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு அமைய பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்தை வைபவரீதியாக ஆரம்பித்துவைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் போது பாராளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாராளுமன்ற இணைப்புக் குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் விசேட குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.

2022 ஜனவரி 18ஆம் திகதி முதல் ஜூலை 28ஆம் திகதி வரை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் காணப்பட்டதுடன், இக்காலப் பகுதியில் பாராளுமன்றம் 48 நாட்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது..\

9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் நேரடி ஔிபரப்பு அததெரண 24 மற்றும் ரிவி தெரண தொலைக்காட்சி அலைவரிசைகளில் தற்போது ஔிபரப்பப்படுகிறது.