பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலமொன்றை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதெடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க சதி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அமைப்பாளர் உள்ளிட்ட சிலர் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் அமைதியாக நடந்து கொள்வதற்கும் மக்களுக்கு சுதந்திரம் உண்டு. எனினும் அண்மைய வன்முறை சம்பவத்திற்கு மத்தியில் திட்டமிட்ட இலக்குடனான செயற்பாட்டினால் 72 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வீடுகளை இழக்க நேரிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்