எரிபொருள், எரிவாயு, நெல் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

0
133
Article Top Ad

நாட்டில் நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கினார். எரிபொருள் கொள்வனவு மற்றும் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்குமாறும் அவர் பணிப்புரை விடுத்தார்.

மண்ணெண்ணெய் தொடர்பான பிரச்சினை தொடர்பில் இதன் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். அரிசி விலை உயர்வு மற்றும் நெல் விவசாயிக்கு உத்தரவாத விலை வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

நெல் கொள்வனவு செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. நெல் கொள்வனவுகளை துரிதப்படுத்துமாறும் நெல் களஞ்சியசாலைகளை மேம்படுத்துமாறும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தற்போதைய எரிவாயு நெருக்கடி குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், எரிவாயு கொள்வனவு, இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக் காட்டப்பட்டது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகார சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, எண்ணெய், எரிவாயு மற்றும் நெல் என்பவற்றுடன் தொடர்புள்ள அரச நிறுவன தலைவர்கள் மற்றும் வங்கிகளின் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.