” கலப்பு (ஐபிரிட்) நீதிமன்றம் ஊடாக, 58 படையினரை சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முயற்சித்து வருகின்றார்.”
இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார் .
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஊடாக 58 இலங்கை படையினரை சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட், 2015 ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகின்றார்.
அதனால்தான் ஓரிரு இராணுவ அதிகாரிகள் இருந்தாலும், இராணுவ மயமாக்கல் என விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். பிற நாடுகளில் இராணுவ நியமனம் இல்லையா, எதற்காக இலங்கையின் பின்னால் மட்டும் துரத்த வேண்டும்? இராணுவ மயமாக்கலால்தான் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற விம்பத்தை உருவாக்கவே இப்படியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மே 9 சம்பவம், இறுதியாக இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கேள்விகள் எழுப்படும். இராணுவத்தினரின் பெயர்களை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தப்படுகின்றது. இந்த சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும்.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் படை குறைப்பு பற்றியும் பேசப்படுகின்றது. ஆனால் அங்கு வாழும் மக்கள் அந்த நிலைப்பாட்டில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினாலும், வெளியில் புறம் பேசுகின்றன. எனவே ,உறுதியானதொரு வெளிவிவகாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.” – என்றார்.
..