இலங்கைக்கு பிரித்தானியா உதவி

0
145
Article Top Ad

பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இங்கிலாந்து அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை வழங்கி வருவதாக மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஐ.நா.வுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் உணவு உண்பதற்கும், எரிபொருள், மின்சாரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறையாலும் அவதிப்படுகின்றனர்.

உலகிலேயே ஐந்தாவது பெரிய உணவு விலை பணவீக்கத்தை இலங்கை கொண்டுள்ளது, ஆகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரிசியின் விலை கடந்த ஆண்டை விட 150 சதவீதம் அதிகம்.

ஐ.நா பொதுச் சபையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியுடன் நடந்த சந்திப்பின் போது லார்ட் அஹ்மட், 3 மில்லியன் பவுண்டுகளின் உயிர் காக்கும் உதவிப் பொதியை வழங்கவிருந்தார்.

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநா கூட்டாளிகள் மூலம் இந்த நிதி வழங்கப்படும். இது உணவு, விதைகள் மற்றும் பயிர்களை வளர்ப்பதற்கு உதவும். புதிய நிதியுதவியானது ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவின் ஒரு பகுதியாகும்.

ஐக்கிய இராச்சியம் ஏற்கனவே ஐநாவின் மத்திய அவசரகால பதில் நிதியம் (CERF), உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் ஆதரவை வழங்கி வருகிறது.

2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1.7 பில்லியனுக்கும் அதிகமான தொகையை CERF க்கு வழங்கியுள்ள ஐக்கிய இராச்சியம், இலங்கைக்கு ஏற்கனவே 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைக்க ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலக வங்கியும் ஒன்றிணைந்த செயற்திட்டத்தின் கீழ் அவசர உதவிகளை வழங்கி வருகின்றன.