ஏமாற்றப்பட்ட பல்லாயிரம் பேரில் தைவான் இளைஞர் யங் வெய்பின்னும் ஒருவர்,
எளிமையான வெளிநாட்டு வேலை, கணிசமான சம்பளம் மற்றும் தமக்கென ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளருடன் சொகுசு விடுதியில் தங்குவதற்கும் வாய்ப்பு என யங் வெய்பின்னால் மறுக்க முடியாத வாய்ப்பு அது.
கம்போடியாவில் டெலிசேல்ஸ் எனப்படும் தொலைபேசி மூலம் விற்பனை செய்யும் வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்தவுடன் யங் வெய்பின் உடனே சம்மதம் தெரிவித்தார். 35 வயதான தைவானைச் சேர்ந்த அவரால், மசாஜ் தொழில் செய்து அதிகப்பணம் ஈட்ட முடியவில்லை. தந்தைக்கு பக்கவாதம் வந்ததால் பெற்றோருக்கு உதவ வேண்டிய தேவையும் அவருக்கு இருந்தது.
சில வாரங்களுக்குப் பிறகு, யங் வெய்பின் புனாம் பென்னுக்கு விமானம் ஏறினார். கம்போடிய தலைநகரை அவர் அடைந்தபோது, சில மனிதர்கள் அவரைச் சந்தித்தனர். அவர்கள் யங் வெய்பின்னை வெறிச்சோடிய சாலையில் உள்ள ஒரு கட்டடத்திற்கு அழைத்துச் சென்றனர். அது, ஆட்சேர்ப்பு முகவர் அனுப்பிய படங்களில் இருந்த சொகுசு விடுதி அல்ல.
அவருக்கான ஆவணப்படுத்தல் வேலைகளை முடிக்க வேண்டும் என்று கூறி அவரது கடவுச்சீட்டை வாங்கியுள்ளனர். ஒரு சிறிய அறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த வளாகத்தைவிட்டு எப்போதும் நீ வெளியேற முடியாது எனக் கூறியுள்ளனர்.
அதன் பிறகுதான் தாம் தவறான இடத்திற்கு வந்திருப்பதும், இது மிகவும் மோசமான இடம் என்றும் தனக்குத் தெரியவந்ததாகவும் யங் வெய்பின் பிபிசியிடம் தெரிவித்தார்.
சமீபத்திய மாதங்களில், தென்கிழக்கு ஆசியாவில் வேலை மோசடிகளை நடத்தும் மனித கடத்தல்காரர்களுக்கு இரையாகிவிட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் வெய்பினும் ஒருவர். இந்தோனீசியா, வியட்நாம், மலேசியா, ஹாங்காங் மற்றும் தைவான் உட்பட ஆசியாவின் பல நாட்டு அரசாங்கங்கள் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
எளிதான வேலை மற்றும் ஆடம்பரமான சலுகைகளை உறுதியளிக்கும் விளம்பரங்களால் கவரப்பட்டு பலர் கம்போடியா, மியான்மர், தாய்லாந்துக்கு ஏமாந்து பயணம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் சிறைவைக்கப்பட்டு, ‘மோசடி தொழிற்சாலைகள்’என அறியப்படும் ஆன்லைன் மோசடி மையங்களில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
மனித கடத்தல் தென்கிழக்கு ஆசியாவில் நீண்டகாலமாக ஒரு பிரச்னையாக இருந்துவருகிறது. இது குறித்து கூறும் வல்லுநர்கள், மோசடிப் பேர்வழிகள் தொலைநோக்கோடு சிந்தித்து வேறுவேறு வகையான ஆட்களை இந்த மோசடிக்கு இரையாக்குவதாகக் கூறுகின்றனர்.
நன்கு படித்த, கணிணி அறிவு கொண்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட பிராந்திய மொழி பேசும் இளைஞர்கள்தான் அவர்களுடைய இலக்கு.
இணையதள மோசடி, ‘பிக் பட்சரிங்’ (pig butchering) எனப்படும் காதல் மோசடி, க்ரிப்டோ மோசடி, பண மோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்டம் ஆகியவற்றில் ஈடுபடத் திறமையான தொழிலாளர்களைத் தேடும் மனிதக் கடத்தல்கார்கள் மேற்கூறிய தகுதிகளை முக்கிய தகுதிகளாகக் கருதுகின்றனர்.
பெண்ணாக நடித்து தெரியாத நபர்களிடம் தான் நட்பு ஏற்படுத்த வேண்டியிருந்ததாக வியட்நாமைச் சேர்ந்த சி டின் பிபிசியிடம் தெரிவித்தார்.
“தினமும் 15 பேரை நண்பர்களாக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். அதோடு, சூதாட்ட மற்றும் லாட்டரி இணையதளங்களில் இணையும்படி அவர்களை கவர்ந்திழுக்க வேண்டும். அதில், 5 பேரை அவர்களது சூதாட்ட கணக்கில் பணம் முதலீடு செய்ய வைக்க வேண்டும்” என்கிறார் சி டின்.
பணிவுடன் பணியாற்றும்படி கேட்டுக்கொண்ட மேலாளர், இங்கிருந்து தப்பிக்கவோ எதிர்க்கவோ முயற்சிக்க வேண்டாம், மீறினால் சித்ரவதை அறைக்கு அழைத்துச் செல்லப்படுவாய் எனவும் அவர் தெரிவித்ததாக கூறும் சி டின், இலக்கை நிறைவு செய்யாவிட்டால் பட்டினி போடப்படுவேன் என்றும் அடித்து துன்புறுத்தப்படுவேன் என்றும் சிலர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்.
பெயர் விவரங்களை வெளியிட விரும்பாத வியட்நாமைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இருவர், தாங்கள் தாக்கப்பட்டதாகவும், தங்கள் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டதாகவும், தொடர்ந்து வேறு மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதாகவும் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவருக்கு 15 வயது. அந்தத் தாக்குதல்களால் அந்தப் பெண்ணின் முகமே மாறிவிட்டது. வீடு திரும்பிய பிறகு பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட அவர், தன்னுடைய தோழிகளைச் சந்திக்கத் தயங்குகிறார்.
மற்றொருவர், 25 வயது இளைஞர். பிபிசியிடம் அவர் பகிர்ந்துகொண்ட இந்தப் புகைப்படம் தன்னைக் கடத்தியவர்களில் ஒருவரால் எடுக்கப்பட்டது. இது அவரது குடும்பத்தினரிடம் பேரம் பேச பயன்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் ஓர் உலோகப் படுக்கையில் அவர் கை விலங்கிடப்பட்டிருப்பதையும், அவர் முழங்காலில் மின்சாரம் தாக்கிய காயங்கள் இருப்பதையும் காண முடிகிறது.
இவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்றால் மோசடி நிறுவனங்களுக்கு அடைக்க வேண்டிய கடனைச் செலுத்த வேண்டும். அடிப்படையில், அது மிகப்பெரும் தொகை. இல்லாவிட்டால், இவர்கள் வேறு மோசடி நிறுவனத்திற்கு விற்கப்படும் அபாயம் உள்ளது. சி டின் விஷயத்தில், அவரை மீட்பதற்காக அவரது குடும்பத்தினர் 2,600 அமெரிக்க டாலர்கள் செலவழித்தனர்.
இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் ஆபத்தான முறையில் தப்பிக்க முயற்சி செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
கடந்த மாதம் கம்போடிய சூதாட்ட விடுதியில் சிறை வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வியட்நாமியர்கள் தங்கள் வளாகத்திலிருந்து வெளியேறி, எல்லையைத் தாண்டி நீந்த முயன்று ஆற்றில் குதித்தனர். அந்தச் சம்பவத்தில் 16 வயது இளைஞர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா?
இலங்கை தமிழர்களின் கண்ணீர் கதை: “ரஷ்ய படையினர் நகங்களை பிடுங்கினர், கொடுமைப்படுத்தினர்”
எகிப்தியர்களுக்கு முன்பே ‘மம்மி’ செய்த சின்சோர்ரோ மக்கள் பற்றி தெரியுமா?
மோசடி மையங்களின் முக்கிய இடமாக கம்போடியா உருவெடுத்திருந்தாலும், தாய்லாந்து மற்றும் மியான்மரின் எல்லை நகரங்களிலும் இத்தகைய மோசடிகள் அரங்கேறுகின்றன. தரவுகளின்படி பார்க்கையில், அவற்றில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களுக்குச் சொந்தமானவை அல்லது சீன நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டவையாக உள்ளன.
இந்த நிறுவனங்கள் சீன மோசடி குழுவினருக்கு பாதுகாப்பு அளிப்பதாக ‘காசோ'(Gaso) எனப்படும் மீட்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவான குளோபல் ஆன்டி-ஸ்கேம் அமைப்பு தெரிவிக்கிறது.
“பண மோசடி என்று எடுத்துக்கொண்டால் பல நிறுவனங்கள் ஐ.டி., நிதி மேலாண்மை என அதிநவீன தனித்தனி துறைகள் கொண்டுள்ளன. பெரிய நிறுவனங்கள் மோசடி செய்வதற்கான பயிற்சி வழங்கல், முன்னேற்ற அறிக்கைகள், ஒதுக்கீடுகள் மற்றும் விற்பனை இலக்குகள் ஆகியவற்றுடன் கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள் போல செயல்படலாம்” என்கிறார் ‘காசோ’ அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜான் சாண்டியாகோ.
மோசடி கும்பல்கள் பெரும்பாலும் தங்கள் மோசடி மையங்களை நடத்த அல்லது ஆட்சேர்ப்பு செய்ய உள்ளூர் கும்பல்களுடன் கூட்டாளியாக இருப்பதால், அவர்கள் பன்னாட்டு தொடர்புடையவர்களாக உள்ளனர். 40க்கும் மேற்பட்ட உள்ளூர் குழுக்கள் தென்கிழக்கு ஆசிய மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கடந்த மாதம் தைவான் அதிகாரிகள் கூறினர்.
சீனாவில் இருந்து நடத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் ஆன்லைன் மோசடிகள் நீண்டகால பிரச்னையாக இருந்தாலும், கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடிமையாக வேலை செய்ய ஒப்புக்கொள்ளாத தொழிலார்கள் மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர்.
மனித கடத்தல்காரர்கள் சீன தொழிலாளர்களேயே குறிவைத்து வந்தனர். ஆனால், கொரோனா காலத்தில் சீனாவில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமுடக்கம், இவர்களது கவனத்தை வேறு நாடுகளின் பக்கம் திருப்பியது.
தொற்று நோயிலிருந்து பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துடன் மீண்டு வந்து கொண்டிருந்த ஆசியாவில், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் மோசடியாளர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.
“பாதிக்கப்பட்டவர்களில் நிறையப் பேர் இளைஞர்கள், சிலர் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று குறைந்த வேலை வாய்ப்புகளைக் கொண்டுள்ளவர்கள். அவர்கள் கண்ணியமான வேலைகள் குறித்த இந்த ஆன்லைன் விளம்பரங்களைப் பார்த்து, அவற்றைப் பின்பற்றுகிறார்கள்” என்கிறார் ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பைச் சேர்ந்த ஆசிய-பசிஃபிக் புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு நிபுணர் பெப்பி கிவினிமி-சித்திக்.
“சமீபத்திய மாதங்களில் பல ஆசிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதால், பல பகுதிகளில் இருந்து மக்களை கவர்ந்திழுப்பது மனித கடத்தல்காரர்களுக்கு எளிதாகியுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் சமாளிக்க குறைந்த தண்டனை கொண்ட பகுதிகளில் அவர்கள் இயங்குவதாகவும்” அவர் தெரிவிக்கிறார்.
மியான்மரில் பில்லியன் டாலர் சூதாட்ட விடுதி மற்றும் ஷ்வே கொக்கோ எனப்படும் சுற்றுலா வளாகம் உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் முதலீடுகளைக் கொண்ட சீன வணிகரான ஷீ ஜிஜியாங்கை தாய்லாந்து அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர்.
சட்டவிரோத சூதாட்டத்தை நடத்திவரும் குழுவின் தலைவராக அறியப்படும் இவர், சர்வதேச போலீஸாரால் தேடப்பட்டுவந்தார். தாங்கள் கடத்தப்பட்டு “கேகே பார்க்” என அழைக்கப்படும் ஷீ வளாகத்தில் சிறை வைக்கப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் கம்போடிய காவல்துறை இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசிய மற்றும் வியட்நாமிய அதிகாரிகளுடன் இணைந்து மோசடி மையங்களில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கம்போடியாவின் உள்துறை அமைச்சர் இது பரவலான பிரச்னை என்று ஒப்புக்கொண்டுள்ளார். இது ‘கொடூரமாக வெளிப்பட்டுள்ள ஒரு புதிய குற்றம்’ எனக் குறிப்பிட்ட அவர், அதே சமயம் இது வெளிநாட்டினரால் பெருமளவில் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
கம்போடிய காவல்துறை, நீதிபதிகள் மற்றும் பிற அதிகாரிகள் வழக்கைக் கைவிட கடத்தல்காரர்களிடம் லஞ்சம் பெறுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுவதாக மனித கடத்தல் தொடர்பான இந்த ஆண்டின் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை கூறுகிறது.
நம்பகமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அந்த அதிகாரிகள் பலர் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த சிக்கலை முழுவதுமாக அகற்றுவதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் எனக் கூறும் கிவினிமி-சித்திக், “அரசாங்கங்கள் தங்கள் கடத்தல் சட்டங்களை புதுப்பிக்க வேண்டும். தனிநபர்களுக்கு தேவையான ஆதரவு அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் எல்லை தாண்டிய சட்ட அமலாக்க ஒத்துழைப்பைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறார். இது அடைய கடினம் என்றும் நேரம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கிடையில், பல நாடுகள் மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன.
சில நாடுகள் தென்கிழக்கு ஆசிய இடங்களுக்குச் செல்லும் நபர்களை விமான நிலையத்தில் நிறுத்தி, பயணிப்பதற்கான காரணங்களைக் கேட்கின்றன. கடந்த மாதம், இந்தோனீசிய அதிகாரிகள் கம்போடியாவின் சிஹானூக்வில்லிக்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல தனியார் விமானங்களை நிறுத்தினர்.
பாதிக்கப்பட்டவர்கள் தப்பித்து வீடு திரும்ப உதவும் காசோ போன்ற தன்னார்வலர்களின் குழுக்கள், பல நாடுகளில் உருவாகியுள்ளன. இந்த தன்னார்வத் தொண்டர்களில் சிலர், முன்பு பாதிக்கப்பட்ட வெய்பின் போன்றவர்கள்.
கம்போடியாவில் 58 நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட பிறகு, ஒருநாள் காலை காவலர்கள் பார்க்காத நேரத்தில், வளாகத்திற்கு வெளியே ஊர்ந்து தப்பிய யங் வெய்பின் தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதியாக வீடு திரும்பினார். இப்போது தனது பழைய வேலைக்குச் செல்கிறார்.
“நிறைய மக்கள் உண்மையில் நல்ல வாழ்க்கையை விரும்புகின்றனர். வேலைகள் பற்றி நம்பத்தகாத கற்பனைகளைக் கொண்டுள்ளனர். இப்போது நான் மக்களை மிகவும் யதார்த்தமாக இருக்க அறிவுறுத்துகிறேன்” என்று பிபிசியிடம் கூறிய யங் வெய்பின், “நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம். இதுபோன்ற ஆபத்தை மேற்கொள்ள நீங்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை. வெளிநாட்டில் தெரியாதவை நிறைய உள்ளன. அது உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை பாதித்துவிடும்” என்கிறார்.
நன்றி பிபிசி செய்தி சேவை