ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் சிங்கப்பூரில் பகல் உணவருந்தியதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை, ஜப்பான் விஜயத்தின் போது சிங்கப்பூரில் தங்கியிருந்த போது ஜனாதிபதி சந்தித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ஜனாதிபதி அர்ஜுன மகேந்திரனுடன் பகல் உணவருந்தியதாக வெளியான செய்திகளை மேற்கோள்காட்டி அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தாம் ஜப்பானுக்குப் பயணித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே மதிய உணவை உட்கொண்டேன், சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளுடன் காலை உணவை உட்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
தனது மதிய உணவு ஏற்பாடு தொடர்பில் ஆதாரங்களை வழங்க முடியும் என தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வகுத்த பாதையில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எம்.பி மரிக்கார் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அடிச்சுவடுகளை தாம் ஒருபோதும் பின்பற்றப் போவதில்லை என்றார்.
“நீங்கள் ஹிருணிகாவுடன் இணையப் போவதில்லை என்றால், நீங்கள் என்னுடன் இணைந்து பயணத்தைத் தொடர்வதே சிறந்தது” என்று ஜனாதிபதி பதிலளித்தார்.