பாராளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறை மையினை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதன்படி, அடுத்த தேர்தலுக்கு முன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள்) உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என்றும் “மக்கள் சபை” வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரம் தவிசாளர் என்ற ஒற்றைத் தலைவருக்குச் செல்வதற்குப் பதிலாக தவிசாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியலில் ஊழல் தலைதூக்க முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறையே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உடனடியாக விருப்பு வாக்கு முறையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு முறை ஒன்றை (ஒற்றை மற்றும் விகிதாசார முறை) கொண்ட தேர்தல் முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும் தேர்தலில் செலவிடப்படும் நிதிக்கும் தேர்தல் சட்டம் மூலம் வரையறைகள் இடப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இன்று இந்த நாட்டில் இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று பொருளாதாரத்தின் வீழ்ச்சி. இரண்டாவது, நாட்டின் பெரும்பான்மையான மக்களால் இந்த நாட்டின் அரசியல் முறைமை நிராகரிக்கப்பட்டுள்ளமை ஆகும். இந்தப் பொருளாதாரச் சரிவு அரசியல் முறைமையினால் ஏற்பட்டது என்று பலர் கூறுகின்றனர்.
பொருளாதாரத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் கதைத்துள்ளோம். ஆனால் அரசியல் வேலைத்திட்டத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இன்று எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் அரசியல் முறைமை தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் தியவன்னா ஆற்றில் தள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். அவ்வாறு தனி நபர்கள் கூறவில்லை. அரசியல் முறைமையை ஏற்காததால் தான் அவ்வாறு கூறுகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் இந்தப் போராட்டங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவில்லை. அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு மக்கள் வரவில்லை. மக்கள் தனித்தனியாக முன் வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில், ஒவ்வொரு அரசியல் அமைப்பும் இந்த எதிர்ப்பு இயக்கத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டன. அதனுடன் வன்முறையும் வெடித்தது. வன்முறையின் மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி இடம்பெற்றது . அதனால் அன்றைய போராட்டம் வீழ்ச்சி அடைந்தது.
இந்த அரசியல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் தற்போதும் கூறுகின்றனர். வன்முறையை யாரும் விரும்புவதில்லை. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மனோபாவத்தை மாற்றிக்கொண்டே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
கட்சி முறைமையினால் பாராளுமன்றத்தில் இன்று பல்வேறு குழுக்கள் உருவாகியுள்ளன. நான் ஜனாதிபதியாவதற்கு ஆளுங்கட்சியின் ஆதரவைப் பெற்றேன். இது ஒரு இரகசியம் அல்ல. சிறு பகுதியினர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர். அதனால் எனக்கு இரு தரப்பிலும் வாக்குகள் கிடைத்தன.
குறுகிய கட்சி பேதமின்றி மக்கள் நலனுக்காக நான் பணியாற்றுகிறேன். தற்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, பாராளுமன்றத்தில் தேசிய சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழுக்கள் போன்ற குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இவைகளை நிறைவு செய்ய முடியவில்லை. சிலர் தேசிய சபையில் இணைந்துள்ளார்கள் சிலர் வருவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்றே நாடு எதிர்பார்க்கிறது. நாம் இத்தோடு நின்றுவிடக் கூடாது.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டும். கிராம மட்ட அரசியலால் மக்கள் சலிப்படைந்து விட்டதால் இன்று புதிய கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். அது அரசாங்கமல்ல, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, மக்கள் சபை முறையை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும், அந்த கிராமத்தில் உள்ள பொது அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக பணிகளை செய்ய வேண்டும். அதுதான் மக்கள் சபை ஆகும். அந்த முறை நல்லது. இந்த
அமைப்பு முன்பு கிராமோதய சபை என்ற பெயரில் இருந்தது. அது அரசாங்கத்துடன் தொடர்புடையதொன்று, இது அரசாங்கத்துடன் தொடர்புடையது அல்ல. இந்த மக்கள் சபைத் திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
மக்கள் சபைகள் இயங்கும் போது பிரதேச சபைகளுடன் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். மக்கள் சபைகளை அகற்ற பிரதேச சபைகளுக்கு அனுமதி இல்லை. நாம் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும். பிரதேச சபை முறைமை தொடர்பில் பல கேள்விகள் உள்ளன. பல பிரதேச சபைகள் இலாபம் கூட பெறுவதில்லை. வரிப்பணத்தை நம்பி இருக்கிறார்கள். பணம் பெறும் நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் சம்பளம் வழங்குவதற்கு அப்பணத்தை பயன்படுத்துகின்றன. எனவே இந்த முறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
ஆனால் கடந்த முறை நான்காயிரம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், எட்டாயிரமாக அதிகரிக்கப்பட்டனர். நாடு அவ்வாறு கேட்கவில்லை.கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி இந்த பணியை செய்தார்கள். எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்னர் எட்டாயிரத்தை நான்காயிரமாக குறைக்க வேண்டும். பாராளுமன்றத்தில் அந்தச் சட்டங்களைத் திருத்துவோம். இந்த திட்டத்தை அங்கிருந்து ஆரம்பிக்கலாம். மேலும் மற்றொரு அவசர திருத்தம் உள்ளது. இந்தப் பிரதேச சபைகளின் நிறைவேற்றுத் தலைவர்களாக தவிசாளர்கள் உள்ளனர். இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பிரதேச சபை முறைக்கு முன்னர், நகர சபைகள் மற்றும் கிராம சபைகள் இருந்தபோது அத்தகைய அதிகாரம் இருக்கவில்லை. எனவே பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரத்தை நிறைவேற்றுக் குழுவிற்கு வழங்குவோம் .
அதன் தலைவர் தான் பிரதேச சபையின் தவிசாளர். இப்போது நிதிக் குழுக்கள் உள்ளன. அவ்வாறான ஒரு நிறைவேற்றுக் குழுவை உருவாக்குவோம். அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த இரண்டு விடயங்களையும் நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தேவையான சட்ட வரைவை தயார் செய்யுமாறு அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம்.
மேலும் விருப்பு வாக்கு முறையை பலர் விரும்புவதில்லை. விருப்பு வாக்கு முறைமை பற்றி யாரும் முதலில் சிந்திக்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் மிக ஆழமாக சிந்தித்து 1975 இல் பட்டியல் முறையை முன்மொழிந்தார்.அது ஏனைய கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . அதன்படி நாம் நகர சபைத் தேர்தலை நடத்தினோம். மாநகர சபைத் தேர்தல் நடந்தது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் நடைபெற்றது. அந்த முறைமையை வெற்றிகரமாக நாம் முன்னெடுத்துச் சென்றோம். ஆனால் 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இருந்த கட்சிகள் திடீரென பட்டியல் முறைக்குப் பதிலாக விருப்பு வாக்கு முறையைக் கொண்டு வர முடிவு செய்தன. ஒரு விருப்பு வாக்கு அல்ல, 03 விருப்பு வாக்குளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது. அதேபோல், 196 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆக அதிகரித்தனர்.
இந்நாட்டு அரசியலில் ஊழல் மோசடிகளுக்கு முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறையே ஆகும். எனவே நாம் புதிய தேர்தல் முறையொன்றைத் தயார் செய்ய வேண்டும். விருப்பு வாக்கு முறை இல்லாத பட்டியல் முறை அல்லது கலப்பு முறை (ஒற்றை மற்றும் விகித முறை) இவ்விரண்டில் ஒன்று பற்றி கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் தீர்மானம் எடுத்து புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும்.
அப்போது பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இன்று கட்சிகளிடையே உடன்பாடு இல்லை. பிரதான கட்சிகளுக்கு ஒன்று கூறுகின்றனர், சிறிய கட்சிகளுக்கு ஒன்றை கூறுகின்றனர். இப்படி முன்னோக்கிச் செல்ல முடியாது. அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தீர்மானத்தை எடுக்க வேண்டும். நான் நீதி அமைச்சருடனும் கலந்துரையாடினேன். நாம் பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானிப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை முன்மொழிய இருக்கிறோம். இதை தள்ளிப் போட முடியாது.
ஏனெனில் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால், நான் எந்த முறை சிறந்தது என்று மக்களின் கருத்துகளைப் பெற சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவேன். இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். அந்த முறை குறித்து பேசப்பட்டு வருகிறது. கலந்துரையாடி பொருத்தமான ஒரு முறை தெரிவு செய்யப்படும். எனவே பாராளுமன்றத்தின் தெரிவுக் குழு அது தொடர்பான செயற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும். இல்லையென்றால் நான் இது தொடர்பான பொறுப்பை மக்கள் முன்னிலையில் விட்டுவிடுவேன். நாம் இதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்று தேர்தலுக்காக அதிக பணம் செலவிடப்படுகிறது. நான் 77 இல் பழைய முறையில் தான் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது செலவு கட்டுப்படுத்தப்பட்டது. இன்று, சிலர் தேர்தலுக்காக 20-30, 50 மில்லியன் செலவிடுகின்றனர். இவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது? இந்த தேர்தல் முறையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடைபட்டுள்ளனர். அப்படியானால், தேர்தல் சட்டத்தின் மூலம் தேர்தலுக்குச் செலவழிக்கக்கூடிய பணத்திற்கு வரையறைகள் வேண்டும். 77 இல் தேர்தலில் நான் போட்டியிட்ட போது அந்த வரையறைகள் இருந்தன. அப்படித்தான் எமக்கு பணியாற்ற வேண்டியிருந்தது. போஸ்டர் ஒட்ட முடியவில்லை. அப்படியானால், தேர்தலில் செலவிடப்படும் பணத்துக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மற்றுமொறு விடயமும் இருக்கிறது.இன்று நமது அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் இல்லை. பலர் பழையவர்களுடன் பெயரளவில் வேலை செய்கிறார்கள். அப்படியானால், அரசியல் கட்சிகளின் யாப்பு, அவற்றின் செயல்பாடு, உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி, மத்திய குழுக்களைத் தேர்ந்தெடுப்பது, எப்படி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்று விடயங்கள் குறித்தும் தனியான சட்டம் முன்வைக்கப்பட வேண்டும். தற்போது ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசியல் கட்சி சட்டம் என்று சட்டங்கள் உள்ளன. அதன்படி செயல்பட வேண்டும். நிதி வசூலிப்பது எப்படி, நிதி வசூலிக்க முடியாத சந்தர்ப்பங்கள் என்ன என்பதற்கான
விதிகள் உள்ளன. அப்போதுதான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட முடியும். அதற்கு எதிராக யார் வேண்டுமானாலும் நீதிமன்றம் செல்லலாம். வெளிப்படைத்தன்மை இருப்பதால், தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்த நாட்டு பாராளுமன்றம், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்கின்றன. தேர்தலுக்கும் பணம் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இருந்து பெறாமல் பாராளுமன்றத்தினால் பணம் கொடுப்பது நல்லது. அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் இந்த முறை உள்ளது. அப்படியானால், இந்தச் சட்டங்களை நாமும் கொண்டு வர வேண்டும். அதுபற்றி ஆலோசனைகளை வழங்க தனியான ஆணைக்குழு ஒன்றை நியமிக்க எதிர்பார்க்கிறேன். இவை அனைத்தும் அடுத்த வருடத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு புதிய பொருளாதாரத்துடன், ஒரு புதிய அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது என சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் ஒழுக்கத்தை மீறியிருந்தால் உறுப்பினர்களுக்கு எதிராகச் செயல்பட முடியும். இதை எப்படியாவது வலுப்படுத்துவதற்காக பிரித்தானிய பாராளுமன்றத்தில் செய்வது போல், உறுப்பினர்களின் நடத்தை மற்றும் நெறிமுறைகள் குறித்த விதிகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பேன். அதற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இங்கிலாந்தில், Parliamentary Standard Act சட்டம் உள்ளது, அவ்வாறு செயல்படவில்லை என்றால், அது குறித்து அறிவிக்கப்படும். அப்படித் அறிவிக்கும் போது மக்கள் ஆணை காரணமாக வெளியேற்றப்படுவார்கள். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அண்மையில் கூட ஒருவர் விவாதத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விதிகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் கொண்டு வந்து இந்த திருத்தங்களைச் மேற்கொண்டால் மக்களின் நம்பிக்கையைப் பெறலாம். அப்போது அடுத்த தேர்தலில் பலர் வாக்களிப்பார்கள். 85% ஆனோர் வாக்களிக்க வேண்டும். மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும். இன்னும் ஊர்வலம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. இப்போது என்ன நடந்திருக்கிறது என்றால் அரசியல் கட்சிகள் தமக்கு ஆதரவைப் பெறுவதற்காக
போராட்டத்தின் பக்கம் சாய்ந்துள்ளன. போராட்டம் அரசியல் கட்சிகளில் சார்ந்து இல்லை. மக்களின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவந்து பாராளுமன்றத்திற்கு மக்கள் விரும்புபவர்களை நியமிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இந்த வேலையைத்தான் எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டும். இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சிரேஷ்ட உப தவிசாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த மற்றும் சட்டத்தரணிகள், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.