நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் போது எழுந்துள்ள மக்கள் எழுச்சிகளை ஒடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோருவதற்கு ஆசிரியர், அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.
பல்வேறு சுற்றறிக்கைகள் மூலம் கருத்துக்களை வெளியிடும் அடிப்படை உரிமையை முடக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நிறுத்தி, கருத்துக்களை வெளியிடும் உரிமையை உடனடியாக உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளை வற்புறுத்துவதற்கு, கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில், கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ஆசிரியர்-அதிபர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஒக்டோபர் 5, 2022 அன்று பொது நூலகக் கேட்போர் கூடத்தில் மாநாட்டை நடத்தியதேடு ஆறு தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.
2022ஆம் ஆண்டு உலக ஆசிரியர் தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நடத்தப்பட்ட மாநாட்டில், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிக அளவில் காணப்படுகின்ற நிலையில், சிறுவர்களின் ஊட்டச்சத்து, போக்குவரத்து மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான முறையான திட்டத்தை தயாரிக்க அதிகாரிகளை கட்டாயப்படுத்தவும் அவர்கள் மேலும் முன்மொழிந்தனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வாழ்க்கைச் செலவும், போக்குவரத்துச் செலவும் கட்டுப்படியாகாததால், ஆசிரியர் – அதிபர் ஊதிய வேறுபாடு முற்றிலும் களையப்படும் வரை, வாழ்க்கை மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கு போதிய அளவு உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்கும் போராட்டத்தை அடுத்து நியமிக்கப்பட்ட அமைச்சு உபகுழு, ஆசிரியர் – அதிபர் பிரச்சினைகளை தீர்க்க முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், சுபோதனி சம்பள குழுவின் யோசனைக்கு அமைய மிகுதி சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.