மஹிந்தவை சந்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்!

0
107
Article Top Ad

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷ இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கான தூதுவராக செயற்பட்டமையை மஹிந்த ராஜபக்ஷ இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

அத்துடன், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நோர்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஸ, எரிக் சொல்ஹெய்ம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நோர்வே உதவிகளை வழங்கும் என எரிக் சொல்ஹெய்ம், மஹிந்த ராஜபக்ஸவிடம் இதன்போது உறுதியளித்துள்ளார்.

நோர்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.