இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி சர்வதேச ரீதியில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இம்முறை போட்டியில் பலர் குதிக்கவுள்ளனர். எதிர்க்கட்சிகள் பொது தேர்தலொன்றுக்கு செல்லவேண்டும் என கோரிக்கை விடுக்கும் அதேவேளை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பொது தேர்தலுக்கு செல்ல தயாரில்லையென கூறியுள்ளது.
இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மீண்டும் பிரதமராகும் முனையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் களமிறங்கியுள்ளார். அதேபோன்று முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், முன்னாள் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், கட்சியின் மூத்த தலைவர்கள் பென்னி மொர்டான்ட், பென் வாலஸ், ஜெரோமி ஹண்ட் உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்கட்டமாக கட்சி எம்.பி.க்கள் இடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அவர்களின் வாக்குகளின் அடிப்படையில் 2 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இறுதிக்கட்டமாக கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்பார்.
லிஸ் ட்ரஸ் பதவி விலகலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக், சுயெல்லா பிராவர்மேன் ஆகியோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.
ரிஷி சுனக் பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்டவர். இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார். மற்றொரு வேட்பாளர் சுயெல்லா பிராவர்மேனின் தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் கோவா மாநிலத்தை சேர்ந்தவர். அவரது தாய் உமா தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இப்போதைய சூழ்நிலையில் ரிஷி சுனக் பிரதமராக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை ஆளும் கட்சி எம்.பி.க்களில் 137 பேர் ரிஷியை ஆதரித்தனர். லிஸ் ட்ரஸுக்கு 113 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வாக்களித்தபோது ரிஷிக்கு 42.6 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. லிஸ் ட்ரஸ் 57.4 சதவீத வாக்குகளைப் பெற்று பிரதமராக பதவியேற்றார்.
இந்தமுறை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்து புதிய பிரதமரை தேர்வு செய்யக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்படி ரிஷி சுனக் புதிய பிரதமராக பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் போட்டியில் களமிறங்குவதால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று தெரிகிறது.
இப்போதைய நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் ரிஷி சுனக்குக்கு 21 சதவீத ஆதரவும் போரிஸ் ஜான்சனுக்கு 16 சதவீத ஆதரவும் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி பதவியேற்றால் அந்த நாட்டில் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை பெறுவார்.