நாட்டின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு அமைவாக இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ,வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகல் அல்லது நீக்கம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தீர்ப்பதற்கு நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இரட்டைக் குடியுரிமை தொடர்பில் சில பாராளுமன்ற பிரதிநிதிகளின் பெயர்கள் வெளியாகி வருவதாகவும், அரசாங்கம் என்ற ரீதியில் இவ்விவகாரத்தை ஆராய்ந்து கையாள்வதற்கு அதிகாரம் இல்லை. இரட்டைக் குடியுரிமையை கண்டறியும் முறை அரசாங்கத்திடம் இல்லை , அனைத்தையும் நீதிமன்றமே செய்ய முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய தொலைக்காட்சி ஒருபோதும் விற்பனை செய்யப்பட மாட்டாது. பலர் அங்கு வேலை செய்கிறார்கள். அதன் கடன் தற்போது ஒரு பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. எனவே, அங்குள்ள வெற்று காணியை குத்தகைக்கு வழங்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.தேசிய தொலைக்காட்சி தொடர்பில், தனியார் துறையுடன் எந்த உடன்பாடிக்கையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.