அரசாங்கம் துர்நாற்றம் வீசுவதுடன் காலாவதியாகியுள்ளது. அதனால்தான் மக்கள் வெவ்வேறு திசைகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். அதனால்தான் உடனடியாக சர்வஜன கருத்துகோரலுக்காக பொது தேர்தல் ஒன்று நடத்த வேண்டும் என்று கூறுகின்றோம். அந்த வாக்கெடுப்பின் ஊடாக எமது எதிர்காலம் குறித்து மக்கள் சிந்திக்கலாம் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இன்று அரசாங்கம் பல பாகங்களாகப் பிரிந்துள்ளது. எதிர்க்கட்சியின் பக்கம் வந்து அமர்ந்துள்ள உறுப்பினர்கள் மூன்று நான்கு துண்டுகளாக உடைந்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம் பாரிய நிறுவனங்களுக்கு மிகப் பெரிய VAT வரியை விதித்திருந்தது, ஆனால் கோட்டாபயவின் அரசாங்கம் வரிகளை குறைத்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பலகோடி பணத்தை கொடுத்தவர்களுக்காக இந்த வரி குறைப்பு இடம்பெற்றது.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதால் நாட்டில் மக்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் அறிந்துகொள்ளும் பொது தேர்தல் அவசியமாகும். சர்வதேச நாணய நிதியமும் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமென கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.