நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தொலைநோக்குப் பார்வை சர்வதேச அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) முற்பகல் நடைபெற்ற அரசாங்க அதிகாரிகள் மற்றும் உலக வங்கி உறுப்பினர்களுக்கும் இடையிலான உலக வங்கியின் வரவு செலவுத் திட்ட உதவி மற்றும் அபிவிருத்தி கொள்கை தயாரிப்பு நடவடிக்கை (DPO) ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றும்போதே சாகல ரத்நாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதற்கும், வலுவான கொள்கை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும், தேவையான பாதையில் செல்வதற்கும் இதுவே சிறந்த சந்தர்ப்பம் என சுட்டிக்காட்டிய அவர் , ஒரு நாடு என்ற வகையில் எங்களிடம் அந்த திறன் உள்ளது எனவும், அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான இறுதி அறிக்கையை பெற்றுக்கொள்ளல், வழிகாட்டல்களைத் தயாரித்தல் மற்றும் கால எல்லைக்கு ஏற்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க , நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக ஜனாதிபதி மிகவும் கடினமான தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்-செர்வோஸ்( Faris Hadad – Zervos)கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் நாட்டிற்கான செயலூக்கமான கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையைக் கண்டு ஆச்சரியப்படுவதாகவும், அதற்கு உலக வங்கி ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கொள்கை மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்பிற்காக அரசாங்கங்களுக்கு நேரடி வரவு செலவுத் திட்ட ஆதரவை வழங்கும் அபிவிருத்திக் கொள்கை செயற்பாடுகள் மூலம் குறிப்பிட்ட அபிவிருத்தி விளைவுகளை அடைவதும் இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்,
துரிதமான நிதி உதவியை வழங்குதல், நிதி நிர்வாகத்தை மாற்றுதல் மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி நிதித் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய மூன்று அம்சங்களின் கீழ் இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடன் முகாமைத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை, நிதி மேற்பார்வை, வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், பொதுக் கொள்முதல் வெளிப்படைத்தன்மை மற்றும் பணத்தின் மதிப்பை அதிகரிப்பது, இறையாண்மை நிதித் துறையின் தொடர்பை விலக்குவது மற்றும் படிப்படியாக அபாயத்தைக் குறைத்தல் போன்ற துரைசார் விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மேற்பார்வையை சீர்திருத்தம் மற்றும் மேம்படுத்துதல், தேசிய சுங்கவரிக் கொள்கையில் ஏற்றுமதிக்கு எதிரான போக்கைக் குறைத்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான தடைகளை நீக்குதல், எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறை இறக்குமதி எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல், காலநிலைக்கு ஏற்ற, சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களை உருவாக்குதல், விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சமூக வலுவூட்டல், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவால், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, உலக வங்கியின் உள்நாட்டு முகாமையாளர் சியோ கந்தா மற்றும் உலக வங்கி குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு