இந்தியா, இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!

0
121
Article Top Ad

8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது.

தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி அந்த மகத்தான தருணத்தை அடைவதற்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.