“நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு முயற்சியில் அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும், அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல் விருப்புடன் பணியாற்றவில்லை என்பது அவர்களது இன்றைய ‘மாவட்ட சபை தீர்வு’ தொடர்பான கருத்தாடலிலிருந்து அம்பலமாகியுள்ளது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாவட்ட சபை முறைமையை முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன பிரேரித்திருந்தார். அந்த முறைமையை செயற்படுத்தத் தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் முன்னாள் எம்.பி. சரவணபவன் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“நல்லாட்சி அரசின் காலத்தில் ஜனாதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து புதிய அரசமைப்பு முயற்சியை ஆரம்பித்திருந்தனர். இதன் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய மைத்திரிபால, சிங்கள மக்களுக்கு சமஷ்டி என்றால் பயம். வடக்கு மக்களுக்கு ஒற்றையாட்சி என்றால் பயம். நாம் இந்தச் சொல்லாடல்களை விடுத்து அனைவரும் ஏற்கும் புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்றார்.
புதிய அரசமைப்பு சமஷ்டி முறையிலானதாக அமையாவிட்டாலும் ஓரளவு சிறந்த தீர்வை நோக்கி நகர்ந்தது. அது தமிழர்களுக்கு முழுமையான ஏற்புடையது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், இப்போதுள்ள நிலைமைக்கு அது ஓரளவு முன்னேற்றகரமான விடயம்தான். அந்த முயற்சி ராஜபக்சக்களால் குழப்பியடிக்கப்படுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் பல தடவைகள் கூறியிருந்தனர்.
ஆனால், அவர்கள் இப்போது மாவட்ட சபையை தீர்வாகப் பரிசீலிப்பது தொடர்பில் பேசும்போது, புதிய அரசமைப்பு முயற்சியில் அரசியல் விருப்புடன் – முழு மனதுடன் அவர்கள் ஈடுபடவில்லை என்பது அம்பலமாகின்றது.
தமிழர் தரப்பு அடிப்படையிலேயே தூக்கிக்கடாசிய மாவட்ட சபை முறைமையை இப்போது தீர்வு தொடர்பில் பரிசீலிக்கத் தயார் என்று இந்தத் தலைவர்கள் கூறுவதானது இந்தியாவையும் கேவலப்படுத்துகின்ற ஒன்று.
மாவட்ட சபை முறைமை தீர்வாகாது என்பதால்தான் இந்தியாவின் தலையீட்டுடன் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதைக்கூட தமிழர் தரப்பு தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மாவட்ட சபையை விட மேம்பட்ட மாகாண சபை முறைமையை இன்னும் மேம்படுத்தி அடுத்த கட்டத்துக்கு – ஒற்றையாட்சியை விட்டு செல்வதை விடுத்து இன்னும் கீழிறங்கும் – பின்னோக்கிச் செல்லும் சிங்களவர்களின் செயற்பாட்டால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது” – என்றுள்ளது.
………