இனப்பிரச்சினையைத் தீர்க்க இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்!

0
100
Article Top Ad

“உண்மையானதும் நேர்மையானதுமான தேசப்பற்றுடன் நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில்கொண்டு, தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து, அனைவரும் சம உரிமையுடன் சம அதிகாரத்துடன் ஒவ்வொருவரின் சுயமாரியாதையையும் சுயகௌரவத்தையும் காப்பாற்றிக்கொண்டு எதிர்காலத்தில் நாட்டை வளமான பாதையில் அழைத்துச் செல்ல உறுதிபூணுவோம். அதற்கு சிங்களத் தலைமைகள் தமது கடந்தகால கசப்பான செயற்பாடுகளையும் அணுகுமுறைகளையும் திருத்திக்கொண்டு இதயசுத்தியுடன் எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.”

– இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையின் மூலம் அறைகூவல் விடுத்துள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நாட்டில் பல்வேறுபட்ட குழப்பங்கள் ஏற்படுவதற்கு மாறிமாறி வந்த அரசுகளே காரணமாக இருந்திருக்கின்றன. சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ் சேனநாயக்க மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கும் அவர்களை நாடட்டரவர்களாக்குவதற்குமான பிரேரணையைக் கொண்டுவந்தார்.

அதற்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சிங்கள மொழி மட்டுமே அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்பதை நிலைநாட்டுவதிலேயே தங்களுக்கிடையில் போட்டிபோட்டுக்கொண்டன. இது ஒருபுறமிருக்க, சுதந்திரமடைந்த நாட்களிலிருந்து, விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெளிமாவட்டங்களிலிருந்து அரச செலவில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இதனூடாகத் தமிழ் மக்கள் தமது பிரதேசத்துக்குள்ளேயே சிறுபான்மையினராக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் குடியேற்றங்கள் காரணமாக, புதிய தேர்தல் தொகுதிகள், புதிய சிங்கள கிராமங்கள் உருவாகத் தொடங்கின.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியான அம்பாறை ஒரு சிங்கள தேர்தல் தொகுதியாக மாறியது. அதேபோன்று திருகோணமலையில் சிங்கள மக்கள் குடியேற்றத்துடன் சேருவாவில என்ற தொகுதியும் உருவாக்கப்பட்டது. இப்போது முல்லைத்தீவில் மணலாறு என்ற பிரதேசம் சிங்கள குடியேற்றத்தின் ஊடாக வெலிஓயா என்னும் சிங்கள கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று வவுனியா மாவட்டத்திலும் கொக்கச்சான்குளம், கொக்குவெளி போன்ற கிராமங்கள் போகஸ்வௌ, கொக்கெலிய என்று மாற்றப்பட்டுள்ளன. கடந்த பல வருடங்களாக இத்தகைய குடியேற்றங்கள் ஊடாக புதிய சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உண்மையாகவே இனங்களுக்கிடையில் சமத்துவம், மொழிகளிடையில் சமத்துவம் என்று பேசக்கூடியவர்கள் இன்னுமொரு இனத்தை, மொழியை அல்லது கலாசாரத்தை அழிக்க முற்படமாட்டார்கள். ஆனால், இன்றும்கூட தமிழ் மக்கள் தமது மொழிசமத்துவத்துக்காகவும் தமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலையிலேயே இருக்கின்றனர்.

திட்டமிட்டவகையில் ஓர் இனத்தின் மீது ஒடுக்குமுறைகளையும் கலவரங்களையும் அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டுக்கொண்டும் ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் இனப்பரம்பலை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டு, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பூமியிலிருந்து அவர்களை விரட்டி அங்கு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்கின்றீர்கள்.

இந்த இலட்சணத்தில் நீங்கள் உங்களை நாட்டுப்பற்றாளர்கள் என்றும் மண்ணை நேசிப்பவர்கள் என்றும் படங்காட்டுவதென்பது அருவெறுக்கத்தக்கதாகவே தோன்றுகின்றது.

கடந்த முப்பது வருடகாலதுக்கும் மேலாக, இந்த நாட்டில் ஒரு நடைபெற்றது. தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தைச் சார்ந்த பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான போராளிகளும் இராணுவத்தினரும் கொல்லப்ட்டார்கள்.  முடிந்து பதின்மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. போர் நடைபெற்ற போதும், அதற்குப் பின்னரும் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போது மீண்டும் பேசுவோம் என்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர் என பல்வேறுபட்ட தரப்புகளும் பேசுவோம் என்கின்றார்கள்.

இதுவரைகாலமும் பேசி தயாரிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு என்ன நடந்தது? ஆகவே அரசு பேச்சு என்ற மேசைக்கு வரும் முன்னர், இந்த ஆவணங்கள் அனைத்தையும் பேச்சு மேசைக்குக் கொண்டுவரவேண்டும். அவற்றில் ஒரு பொதுவான உடன்பாவரமுடியுமா என்பதைப் பார்க்கவேண்டும். அதனை விடுத்து, வாருங்கள் நாங்கள் மீண்டும் பேசலாம் என்று கூறுவது நீங்கள் மீண்டும் எங்களை ஏமாற்றப்போகிறீர்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

நீங்கள் அனைவருமே நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டிருப்பதாகவும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறிவருகின்றீர்கள். ஆனால், அந்தப் பொருளாதார மேம்பாட்டை வடக்கு – கிழக்குவாழ் தமிழ் மக்கள் செய்வதற்கு அதற்கான அதிகாரங்களைக் கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இல்லை.

நாடு திவாலாகப்போய், வாங்கிய கடனை கட்டமுடியாமல், சோற்றுக்கு வழியில்லாமல், மூன்று நேர உணவு ஒருவேளை உணவாக மாறியுள்ள சூழ்நிலையிலும் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவதில் நீங்கள் பின்னிற்கவே செய்கிறீர்கள். உங்களது இத்தகைய நடவடிக்கைகள் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு கானல்நீராகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடிமகன்கூட சிங்கள தலைமைகள் எதன் மீதும் நம்பிக்கை வைக்கமுடியாது என்று சொல்லும் அளவுக்கு உங்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

நிலைமை இவ்வாறிருக்க, தமிழ்த்தரப்புகள் ஒற்றுமையாக வரவேண்டும் என்றும், அனைத்தையும் கொடுப்பதற்குத் தயாராக இருப்பது போலவும், மாறிமாறி ஊடகங்களுக்குச் செய்திகள் கொடுப்பது அபத்தனமானதாகவும் போலித்தனமானதாகவும் தோன்றுகின்றது.

அதுமாத்திரமல்லாமல், உங்களுக்குச் சிலதேவைகள் வருகின்ற போது இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுகளை நடத்துவது போன்று படங்காட்டுவதும் பின்னர் அவற்றைக் கிடப்பில் போடுவதும் நாங்கள் தொடர்ந்து பார்த்துவரும் ஒரு நெடுந்தொடராகவே அமைந்திருக்கின்றது (மெகாசீறியல்).

நாடு பொருளாதார ரீதியில் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கின்ற வேளையிலாவது நீங்கள் நிலைமையின் ஆபத்தை உணர்ந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு தீர்வுத்திட்டத்தை நோக்கி நடைபோட இப்போதாவது சிங்களத் தலைமைகள் முன்வரவேண்டும்” – என்றுள்ளது.