குடும்ப ஆட்சி காரணமாகவே ராஜபக்சக்கள் கூண்டோடு விரட்டியடிப்பு! 

0
109
Article Top Ad

“ராஜபக்சக்கள் மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்த போது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்கள் மட்டுமல்ல மக்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. அதனால்தான் அவர்களை மக்கள் கூண்டோடு விரட்டியடித்தார்கள்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

‘நீங்கள் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட்டீர்கள். ஆனால், இறுதியில் அவர்களை நீங்கள் வெறுத்தமைக்குக் காரணம் என்ன? அவர்களை மக்கள் விரட்டியடிக்கக் காரணம் என்ன?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மஹிந்த ராஜபக்ச – கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இந்த நாட்டில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியவர்கள். அப்படியான தலைவர்களைத் தோல்வியடைந்த தலைவர்களாக வீட்டுக்கு அனுப்பிவைக்க நாம் விரும்பவில்லை. ஆனால், அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் இறுதியில் எல்லாம் தலைகீழாக மாறின .

மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருக்கும் போதே கௌரவமாக ஓய்வு பெற வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

2015இல்தான் ராஜபக்ச குடும்ப ஆட்சி பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது. அதனால் அந்தக் குடும்பம் தோல்வியடைந்தது.

மீண்டும் 2019 இல் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் திருந்துவார்கள் என்று நாங்களும் மக்களும் நினைத்தோம். அது
நடக்கவில்லை. 2015 இற்கு முன் ராஜபக்ச குடும்பத்தில் 3 பேர்தான் அமைச்சர்கள். 2019 இல் 5 பேர் அமைச்சர்கள்.

குடும்ப ஆட்சியில் அக்கறை செலுத்திய ராஜபக்சக்கள், நாட்டினதும் மக்களினதும் நலன்களில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை. முன்னர் (2015 இற்கு முன்) போன்றே செயற்பட்டார்கள். இதனால் சீற்றமடைந்த மக்கள், ராஜபக்சக்களைக் கூண்டோடு விரட்டியடித்தார்கள்” – என்றார்.