அச்சுறுத்தல்களால் உணர்வுகளை அடிபணிய வைக்கமுடியாது: மாவீரர் தினத்தில் மீண்டும் உணர்த்திய தமிழர்கள்

0
208
Article Top Ad

சொல்லோணா அடக்குமுறைகள் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் தமிழ் தாயகப்பகுதிகளில் சிறப்பான முறையில் நடந்தேறியிருந்தன.

இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளை நேரில் அறிக்கையிடுவதற்காக அங்கு சென்றிருந்தேன்.

இதன் போது நான் உணர்ந்த விடயங்களை குறிப்பிடமுன்பாக அரகலய போராட்டம் பற்றி சிலவரிகளை எழுத நினைக்கின்றேன்.

கொழும்பில் இவ்வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி ஜுலை மாதத்தில் உச்சம் பெற்ற அரகலய என்ற மக்கள் போராட்டம் தற்போது மிக நலிவடைந்து விட்டது.

அப்படி ஒரு போராட்டம் நடந்ததா என்பதற்குரிய அறிகுறிகளே இல்லாத அளவிற்கு ஒடுக்கப்பட்டு அன்றேல் நசுக்கப்பட்டுவிட்டது என்றால் அதற்கு மறுபதில் கூறுவோர் சிலராகவே இருக்கமுடியும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கடுமையான அடக்குமுறைகளுக்கு முன்பாக அரகலய போராட்டக்காரர்கள்

தமது போராட்டத்தை முடக்கிக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த செயற்பாட்டாளரொருவர் வெளிப்படையாகவே என்னிடம் கூறியிருந்தார்.

2006 ம் ஆண்டு முதற்கொண்டு 2014ம் ஆண்டு வரை இருந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தின் போது கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளுடன் ஒப்பிடும் போது ரணில் தலைமையிலான அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் அடக்கு முறைகள் அச்சுறுத்தல்கள் என்பவை மிகமிகக் குறைவானதே.

ஆனாலும் அதற்கு கூட முகங்கொடுக்க முடியாத நிலையில் தமது செயற்பாடுகளை முடக்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் அரகலய போராட்டக்காரர்கள் உள்ளனர்.

ஆனால் யுத்தம் நிறைவடைந்து 13 ஆண்டுகள் ஆனபோதும் அடுக்கடுக்காக அடக்குமுறைகள் அச்சுறுத்தல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோதும் போரினால் கடுமையாக பாதிக்கபட்ட தமிழ் மக்கள் தமது உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூரத்தயங்குவதில்லை.

இம்முறை வன்னியில் நடைபெற்ற நிகழ்வுகள் இதனை மீளுறுதிப்படுத்துவதாக அமைந்தது என்றால் மிகையல்ல.

இம்முறை மக்களின் உணர்வுகளை நேரில் சென்று அவதானிப்பதற்காக கொழும்பில் இருந்து சுமார் 10 மணி நேர பயணம் மேற்கொண்டு முள்ளியவளைக்கு சென்றிருந்தேன். நான் அங்கு சென்றவேளை மாலை 5.30 இருக்கும்.

அப்போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லப்பகுதியில் பெருமளவான மக்கள் இருக்கவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் நான் பார்த்த காட்சிகள் பிரமிப்பாக இருந்தன. அருகில் இராணுவ முகாம் இருந்தபோதும் குழந்தைகள், சிறுவர்கள் ,முதியவர்கள் சகிதமாக மக்கள் திரண்டு வந்தனர்.

அங்கு குவிந்திருந்த மக்களின் அருகே புகைப்படமெடுப்பதற்காக சென்றபோது வெறுமனே விடுப்புப்பார்ப்பதற்காக வந்த கூட்டமல்ல மாறாக உண்மையான உணர்வெழுச்சியுடன் வந்த உறவுகள்.

முதிய வயதுடைய பெற்றோர் தமது பிள்ளைகளின் படங்களை முன்னே வைத்து கதறியழுவதும் பிள்ளைகள் சகிதமாக மனைவி படத்தின் முன் ஆழ்ந்த வேதனையில் அமைதியில் மூழ்கியிருப்பதும், மலர்மாலைகளால் புகைப்படங்கள்

அலங்கரிக்கப்பட்டிருப்பதும் ,உணவுகளால் படையல் படைக்கப்பட்டிருப்பதும் என பல காட்சிகளை அங்கே காணமுடிந்தது. அங்கிருந்த இரு வயதுமுதிர்ந்த தாய் மாருடன்

உரையாடியபோது தமது பிள்ளைகள் 1992ம் ஆண்டு மணலாறில் நடந்த மோதல்களின் போது வீரமரணத்தை தழுவிக்கொண்டதாக கூறினர்.

அவர்களது பிள்ளைகள் இறந்து இவ்வாண்டுடன் 30 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் உரிமைக்காக களப்பலியான தமது பிள்ளைகளின் தியாகத்தை எவ்வளவு

உணர்வுபூர்வமாக கருதிநிற்கின்றார்கள் என்பதை கலந்துரையாடிய கணப்பொழுதுகளில் உணர்ந்துகொள்ளமுடிந்தது.

 

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகிலேயே இராணுவ முகாம் அங்கிருந்தபடி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ கமராவில்

ஒளிப்பதிவுசெய்துகொண்டிருந்தபோதும் தமது உறவுகளுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலிசெய்யத் தவறாத மக்கள் தமது நன்றி மறவா தன்மையை வெளிப்படுத்தினர்.

ஆயிரமாயிரம் படையினர் கனத்த ஆயுதங்களைத் தாங்கி தம்மை அச்சுறுத்தும் பாணியில் நின்றாலும் பயங்கரவாதிகள் என்று அவர்களை அடையாளப்படுத்தி

ஒதுக்கிவிட முயன்றாலும் உண்மையான உறவுகளும் உணர்வுள்ள மக்களும் என்றுமே அவர்களை நினைவில் உயரவே வைத்திருப்பர் என்பதை இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் உணர்த்தின என்றால் மிகையல்லவே!

(முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நேரடியாக விஜயம் செய்து அவதானித்த விடயங்களை வைத்து அருண் ஆரோக்கியநாதன் எழுதியது)