பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய விராட் கோலி சதமடித்தார். 2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், விராட் கோலி ஜோடி 290 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன் 210 ரன்னும், விராட் கோலி 113 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் சார்பில் தஸ்கின் அகமது, எபாட் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும், மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பங்களாதேஷ் அணி 182 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.