“மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் எந்தவோர் அரசாலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது. முதலில் மக்கள் அவர்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்குவதற்கு அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.”
– இவ்வாறு ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல தொழில் நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். அவர்களுள் வைத்தியர்களும் அடங்குவர். பல வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். மேலும் பல வைத்தியர்கள் வெளியேறுவதற்காகச் சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தவகையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து வைத்தியர்கள் இவ்வாறு விண்ணப்பித்து வருகின்றனர்.
பொருளாதார நிலைமை ஒருபுறம் இருக்க, ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமாகச் சம்பளம் எடுப்பவர்களைப் பாதிக்கும்
வகையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள வரியால் வைத்தியர்கள் வெளியேறுவது மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் விரும்புகின்ற – நம்புகின்ற ஆட்சியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச நாடுகள் எமக்கு உதவும் என அந்த நாடுகளே தெரிவித்துவிட்டன.
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற எமது நாட்டு ஊழியர்களே நாட்டுக்குப் பணம் அனுப்புவதில்லை. அந்தளவுக்கு இந்த
அரசு மீது அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இந்தநிலையில் எப்படி வெளிநாடுகள் எமக்கு உதவி செய்யும்? மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் எந்தவோர் அரசாலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது.
முதலில் மக்கள் அவர்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்குவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த நாடு முன்நகரும்.
2019 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை மக்கள் நிராகரித்தனர். அவரை நிராகரித்தவர்களே கோட்டாபயவுக்கு வாக்களித்தனர்.
2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் ரணிலுக்கு எதிராகவே வாக்குக் கேட்டனர். அதன்படியே மக்கள் மொட்டுக் கட்சிக்கு வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்தனர்.
இப்போது அந்த ரணில் நல்லவர் என்று கூறிக்கொண்டு அவரை நாடாளுமன்றம் ஊடாக ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்” – என்றார்.