கஜேந்திரகுமார் கூறுகின்ற முன்நிபந்தனைதான் என்ன?

0
116
Article Top Ad

“இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எதனைக் கூறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. சமஷ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுவார்த்தைக்கு வருவோமென கூறுவதா அல்லது எதனை முன்நிபந்தனை எனக் கூறுகிறார் என்பது தொடர்பான விளக்கம் எனக்கில்லை” – என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சமகால நிலைமை தொடர்பாக  ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது தமிழ் மக்கள் சார்பில் பல விடயங்களை வலியுறுத்தியுள்ளன.

அரச தரப்பினர் சில விடயங்களை செய்வதற்கு சம்மதித்துள்ளனர். அவற்றை அரசு செய்யுமா, இல்லையா என்பதைப்  பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நாட்டில் நிலவும் நெருக்கடி காலங்களில் அரசு பேச்சுக்கு அழைக்கும்  சந்தர்ப்பத்தில் நாம் பேச்சுக்குச் செல்லாமல் சமஷ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுக்கு வருவோம் எனக்  கூறி விட்டு நித்திரை கொள்ளமுடியாது.

பேச வேண்டியது எமது கடமை. அதனைச் சரியான தடத்தில் கொண்டு செல்வதும் தமிழ் தரப்புகளின் கடமை. அதனூடாக முதல்கட்டமாக இருக்கின்ற அதிகாரங்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.

வெறுமனே ஏனைய கட்சிகளைப் பார்த்து ‘துரோகிகள்’, ‘அடிவருடிகள்’ எனக் கூறுவதை விடுத்து தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளிப்படுத்த வேண்டும்” – என்றார்