“தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைக் காண முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் தீர்வைக் காண்பதே எனது நோக்கம்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுக்கள் சுமுகமாக ஆரம்பமாகியுள்ளன. தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்படுகின்றன.
சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தமிழ்த் தரப்பினருடன் கலந்துரையாட வழியமைத்துள்ளேன்.
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைக் காண முடியாது. எனவே, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் தீர்வைக் காண்பதே எனது நோக்கம். பிறக்கும் புத்தாண்டு நல்லதொரு ஆண்டாக – அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆண்டாக அமையும் என நம்புகின்றேன்” – என்றார்.