இலங்கைக்கு இந்தியத் தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு – பெப். 26இல்!

0
104
Article Top Ad

‘மலையகம் – 200’ என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணி நடத்தும். இதில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது பற்றி மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:-

“இலங்கை – இந்திய மலையகத் தமிழர், இலங்கைக்கு வந்த 1823 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 200 வருடங்களாக இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்கி வரும் பங்களிப்பை ஆராய்வு செய்து அங்கீகரிக்க, அமைச்சரவைப் பத்திரம் மூலம் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக தீர்மானித்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம்.

அதேவேளை, இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக, வறுமை, உணவின்மை, காணியுரிமை இன்மை, வீட்டுரிமை இன்மை, கல்வி உரிமை இன்மை ஆகிய கொடுமைகளை எதிர்கொண்டு, இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக இல்லாமல், பெருந்தோட்டங்களிலும், தொழில் தேடி மாநகரங்களிலும் வாழ்கின்றார்கள்.

இந்த மக்களின் பின்தங்கிய குறைவளர்ச்சியை ஆய்வு செய்து அவர்கள் இதுவரை காலமும் இழந்த வளர்ச்சிகளை எட்டிப் பிடிக்கும் நோக்கில், அரசமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, மீளுறுதி (affirmative action) நடவடிக்கைகளை அரசு எதிர்வரும் 200 ஆவது ஆண்டு முதல் முன்னெடுக்க ஆரம்பிக்க வேண்டும் என நாம் அரசைக் கோருகின்றோம்” – என்றார்.
………