நாடு வரலாற்றில் இல்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இவ்வேளையில் தேர்தலுக்காக பணத்தை ஒதுக்க முடியாது என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் ஒதுக்கப்பட வேண்டுமானால் கடந்த 6 மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் அழிந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது அரசின் மாத வருவாய் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெற்றிகரமான முடிவுகளைப் பெற முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அதிகாரி,
தற்போது அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக 93,000 மில்லியன் ரூபாவையும், ஓய்வூதியத்திற்காக 26,500 மில்லியன் ரூபாவையும், நலன்புரி உதவிகளுக்காக 6,000 மில்லியன் ரூபாவையும் ஒதுக்குவதற்கு அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் போதுமானதாக உள்ளது.
இது தவிர சமூக நலன்களுக்கு ரூ.3,500 மில்லியன், மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு ரூ.3,000 மில்லியன், இராணுவ நலன்புரிக்கு ரூ.2,000 மில்லியன், உரங்களுக்கு ரூ.2,000 மில்லியன், எரிபொருள், மின்சாரம், தண்ணீர் மற்றும் காப்பீடு ஆகியவற்றுக்கு ரூ.7,000 மில்லியன் என்ற அடிப்படையில் நிதி அவசியமாகிறது. இவற்றுக்கு அப்பால் கடன்களும் உள்ளன.
இதன்படி, தேர்தலுக்கான பணத்தை மத்திய வங்கியிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக நாணயத்தாள்கள் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பணவீக்கத்தை தடுக்க முடியாது. அப்படி நடந்தால், மக்கள் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.