தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிக விரைவில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு வார காலத்தில் இது குறித்து கூட்டமைப்பின் தலைமை பதிலளிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதன்போது கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை எனக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களால் ஏகோபித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அவர்களது காலத்திலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், எனவே தொடர்ந்தும் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் நேற்றைய கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.