யாழ். மாநகர மேயர் வேட்பாளராக மீண்டும் ஆனோல்ட்? – மணிக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம்

0
109
Article Top Ad

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் மீளவும் களமிறக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது.

இதேவேளை, மணிவண்ணன் தரப்புக்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரியவரும் நிலையில், மீண்டும் மாநகர மேயராக மணிவண்ணன் தெரிவாதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

யாழ். மாநகர சபை மேயராக இருந்த மணிவண்ணன் தனது வரவு – செலவுத் திட்டம் ஒரு தடவை தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகியிருந்தார். மீளவும் மேயர் தெரிவு இடம்பெறாது என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் முன்னர் தெரிவித்திருந்தாலும், சட்ட ஆலோசனைக்கு அமைவாக மீளவும் மேயர் தெரிவை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை கடந்த 6ஆம் திகதி அவர் வெளியிட்டிருந்தார்.

இதற்கு அமைவாக எதிர்வரும் 19ஆம் திகதி மேயர் தெரிவு நடைபெறவுள்ளது. இதன்போது கூட்டமைப்பு சார்பில், முன்னர் மேயராக இருந்து வரவு – செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டமை காரணமாக பதவி இழந்த இ.ஆனோல்டை மீளவும் களமிறக்க ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மணிவண்ணன் தரப்பு நேற்று விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் பேச்சு நடத்தியது. அவர்களுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அந்தக் கூட்டணியில் ரெலோவும், புளொட்டும் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படும் சூழலில், அந்தக் கூட்டணியில் உள்ள அனைவரும் 19ஆம் திகதி இடம்பெறும் மேயர் தெரிவில் மணிவண்ணனை ஆதரிக்கவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.