பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு தற்கொலை என்பதை பொலிஸ் நிராகரித்துள்ளது.
இதன்படி, ஜனசக்தி பிஎல்சி பணிப்பாளரின் அண்மைய மரணம் உண்மையில் தற்கொலையல்ல என்பதை உறுதிப்படுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, அவ்வாறு பரிந்துரைக்கும் எந்தவொரு அறிக்கையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக இதுவரை 175 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 பேர் வாக்குமூலங்கள் மேலதிக ஆய்வுக்காக அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தொலைபேசி மற்றும் வங்கி பதிவுகள் உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் சந்தேக நபர்களோ அல்லது மரணத்திற்கான சரியான காரணமோ இதுவரை நேரடியாகக் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
52 வயதான ஜனசக்தி பிஎல்சி பணிப்பாளர் 2022 டிசம்பர் 15 அன்று பொரளை மயானத்தில் அவரது காரின் ஓட்டுனர் இருக்கையில் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.