அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கு ; டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு

0
101
Article Top Ad

அமெரிக்காவில் அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிபர் பதவியில் தோல்வியடைந்த டிரம்ப், வெள்ளை மாளிகையை காலி செய்து சென்றபோது, முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டிரம்பின் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசாங்க ரகசிய ஆவணங்களை கையாளுவதில் தவறிழைத்ததாக தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளம் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஏற்கனெவே ஒரு முறை அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்காக போட்டியிடவிருக்கிறார். இதற்காக மும்முரமாக தம்மை டிரம்ப் தயார் செய்து வரும் வேளையில், அவர் மீது வரிசையாக பல விசாரணை நடத்த, இந்த குற்றச்சாட்டுகள் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட செய்தி அதிகாரபூர்வமாக அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்படவில்லையென்றாலும், டிரம்பின் வழக்கறிஞர்களிடம், அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் விசாரணைக்கான நீண்ட நெடிய வரலாற்றில், ஒரு முன்னாள் அதிபராக பதவி வகித்தவரும், இரண்டாம் முறை குடியரசு கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராகவும் கருதப்படுபவருமான ஒருவர் மீது நீண்ட கால சிறை தண்டனைக்கு வழிவகுக்கக்கூடிய குற்ற விசாரணை நடைபெறப்போவது இதுதான் முதன்முறை.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், செவ்வாய்க்கிழமை தாம் நீதிமன்றம் செல்ல வேண்டியிருப்பதாக கூறினார். பிறகு 20 நிமிடங்களிலேயே, 2024 அதிபர் தேர்தலுக்கான தமது பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “நான் ஒரு அப்பாவி” என்றும், அரசியல் காரணங்களுக்காக வேட்டையாடப்படுவதாகவும் கூறினார்.

இப்பொழுது பதிவாகியுள்ள வழக்குடன் டிரம்ப் மீது ஏற்கனெவே நியூயார்க், வாஷிங்டன், மற்றும் அட்லாண்டா ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ள குற்றச்சாட்டுகளும் சேர்ந்துகொள்வதால், அவர் ஒரு மிகப்பெரிய நீதி விசாரணையை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

டிரம்ப், பாம் பீச் எனப்படும் இடத்தில் உள்ள தனது மிகப்பெரிய “மார்-அ-லாகோ” வீட்டில், அரசாங்க ரகசியங்களாக கருதப்பட வேண்டிய ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகவும், அவற்றை மீட்பதற்கான முயற்சிகளையும் தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இதுதொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் விசாரித்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் டிரம்ப் தனது வீட்டில் 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், அவற்றில் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கைப்பற்றியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.