ஏன் நொவாக் ஜோகோவிக் வரலாற்றில் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்?

1960களில் முகமது அலி அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிரான இனவாதத்திற்கும் புறக்கணிப்புக்களுக்கும் எதிராக குரல்கொடுத்தமைக்காக எத்தகைய உளவியல் சவால்களை அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் ஊடகங்களுக்கு எதிராகவும் எதிர்கொள்ளநேர்ந்ததோ அத்தகைய பல சாவல்களை தனது உடல் தனக்கானது அதிலே கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில்லை என்ற கொள்கையின் காரணமாக எதிர்கொள்ளநேர்ந்தது.

0
183
Article Top Ad

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் French Open ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தனது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் சேர்பிய வீரர் நொவாக் ஜோகோவிக்.

நோர்வே வீரர் கஸ்பர் ரூட் ஐ எதிர்த்துவிளையாடிய ஜோகோவிக் 7ற்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் முதலாவது செட் ஐ கடும் போட்டிக்கு மத்தியில் கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்களையும் முறையே 6ற்கு 3 மற்றும் 7ற்கு5என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கி மூன்று நேர் செட்களில் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த வெற்றியின் மூலம் நொவாக் ஜோகோவிக் 2016 மற்றும் 2021ம் ஆண்டின் பின்னர் மூன்றாவது பிரஞ்சு பகிரங்க சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

டென்னிஸ் வரலாற்றில் விம்பிள்டன் -Wimbleton,அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகள் – Australian Open, அமெரிக்க பகிரங்க போட்டிகள் – U.S. Open மற்றும் பிரஞ்சு பகிரங்கப் போட்டிகள்-French Open நான்கிலும் குறைந்த பட்சம் மூன்று சம்பியன் பட்டங்களை வென்ற முதலாவது வீரர் என்ற சாதனையையும் ஜோகோவிக் தனதாக்கினார்.

கடந்த ஜனவரி மாதத்தில் அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றதை அடுத்து உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற மகுடத்தை ராபேல் நடாலுடன் பகிர்ந்துகொண்டிருந்தார் நொவாக் ஜோகோவிக். இம்முறை நடால் காயம் காரணமாக அவருக்கு மிகவும் வெற்றிகரமான பிரஞ்சு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் ஜோகோவிக் அபாரமாக விளையாடி 23வது கிராண்ட் ஸலாம் பட்டத்தை வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கையில் அதிக கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றதனால் மட்டும் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என ஜோகோவிக் பெயரை முன்னிறுத்துவதாக எண்ணக்கூடாது.மாறாக அவர் கடந்து வந்த பாதை ,எதிர்கொண்ட சவால்கள், சங்கடங்கள் ,அவமானங்கள் ஆகியவற்றைக் கூட்டிக் கழித்துப்பார்க்கின்றபோது ஜோகோவிக் தான் சிறந்த வீரர் என்ற முடிவிற்கு வந்துவிடமுடியும்.

டென்னிஸ் வரலாற்றில் இதுவரை விளையாடிய வீரர்களில் மிகவும் அழகிலுடன் லாவகமாக விளையாடிய வீரர் எனப் போற்றப்படும் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் வரலாற்றில் மிகுந்த போராட்ட குணமிக்க வீரராக வர்ணிக்கப்படும் ஸ்பெயினின் ராவேல் நடால் ஆகியோருக்கு கிடைத்த ரசிகர் ஆதரவு என்றுமே ஜோகோவிக்கிற்கு கிடைத்ததில்லை.

பெடரர் மற்றும் நடால் ரசிகர்களின் எதிர்ப்பைத் தாண்டியே ஜோகோவிக் அனைத்தையும் சாதிக்கவேண்டியிருந்தது.

1990களில் நேட்டோ படைகள் சேர்பியாவிற்கு எதிராக போரிட்டதன் காரணமாக சேர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிக் எப்போதுமே மேற்குலக ஆதரவு ஊடகங்களால் எதிரியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தார். இதனைத்தாண்டி கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாததன் காரணமாக பல கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இதர முன்னணி போட்டிகளிலும் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தார்.

1960களில் முகமது அலி அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிரான இனவாதத்திற்கும் புறக்கணிப்புக்களுக்கும் எதிராக குரல்கொடுத்தமைக்காக எத்தகைய உளவியல் சவால்களை அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் ஊடகங்களுக்கு எதிராகவும் எதிர்கொள்ளநேர்ந்ததோ அத்தகைய பல சாவல்களை தனது உடல் தனக்கானது அதிலே கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில்லை என்ற கொள்கையின் காரணமாக எதிர்கொள்ளநேர்ந்தது. இதனால் தான் அவர் பல டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க 2021 மற்றும் 2022 ம் ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

இவற்றை எல்லாம் தாண்டி தற்போது டென்னிஸ் விளையாட்டுலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையை அவர் நிலைநாட்டியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

ஜோகோவிக்கின் ஆரம்ப சர்வதேச டென்னிஸ் ஆண்டுகளில் அவருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ரொஜர் பெடரர் 2022ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஓய்வுபெற்றிருந்தார்.

அவரது டென்னிஸ் வாழ்வின் கடும் போட்டியாளரான ராபேல் நடால் தற்போது காயம் காரணமாக ஓய்விலுள்ள நிலையில் இன்னமும் ஒரு வருடமே விளையாடுவதாக அறிவித்துள்ளார் .

இந்த நிலையில் ஜோகோவிக் மிகுந்த உடற்திடனுடன் உள்ளதால் அடுத்து மூன்று நான்கு வருடங்கள் தனிக்காட்டு ராஜாவாக டென்னிஸ் அரங்கில் ஆதிக்கம் செலுத்தவும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் குவிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

இன்னமும் மூன்று வாரங்களில் ஆரம்பமாகவுள்ள விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றிபெறுமிடத்து டென்னிஸ் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்ற மார்க்கிரட் கோர்ட் என்ற வீராங்கனையின் சாதனையை ஜோகோவிக் சமன்செய்வார்.

அதன்பின் வருட இறுதியில் நடைபெறும் அமெரிக்க பகிரங்க போட்டிகளில் வென்றால் ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற சாதனையை 1969ல் ரொட் லேவர் நிலை நாட்டியதன் பின்னர் ஜோகோவிக் நிலைநாட்டுவார்.

ஆக்கம்: அருண் ஆரோக்கிய நாதர்