போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ‘அஸ்வெசும’ இல்லை

0
103
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் முன்னெடுக்கப்படும்  நலன்புரித் திட்டத்திற்கான நபர்களைத் தெரிவு செய்யும் போது தகுதியான பலர் துண்டிக்கப்பட்டுள்ளதாகக்கூறி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டமும் இணைந்துள்ளது.

நம்பகமான புள்ளிவிபரங்களுக்கு அமைய, போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களும் அந்த நன்மையை இழந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,901 பேர் மாத்திரமே சமுர்த்தி உதவித்தொகையை பெற்றுக்கொள்வதாகவும், ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி உதவித்திட்டத்திற்கு 16,211 பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூன் 27ஆம் திகதி புதுக்குடியிருப்பு உடையார்கட்டு சமுர்த்தி வங்கியின் முன்பாக மூங்கிலாறு, உடையார்கட்டு, தேராவில் உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு,  புதிதாக தயாரிக்கப்பட்ட பட்டியலில் பயன்பெறத் தகுதியானவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என வலியுறுத்தினர்.

நலத்திட்ட உதவிகளைப் பெறத் தகுதியுடைய அனைவருக்கும் அந்தச் சலுகைகளை வழங்குமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தை முன்னெடுத்த கிராம மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ். ஜெயகாந்த் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பதில் செயலாளர் கே. கணகேஸ்வரன் ஆகியோரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர்.

சிவில் சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன், ஊடகவியலாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு மகஜரின் உள்ளடக்கத்தை தெளிவுபடுத்தினார். மிகவும் வறிய மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இறுதிப் போரினால் எமது வடமாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விடுகின்றது. முல்லைத்தீவு மாவட்டமே இந்நிலைமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது சொந்த பிரதேசங்களில் இருந்து வெறும் கையுடன் முகாம்களை சென்றடைந்த அவலத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. மேலும், பெண் தலைமையிலான குடும்பங்கள், விதவை குடும்பங்கள், விதவைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் மிகவும் உயர்ந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படாதது மிகவும் வேதனையளிக்கிறது.”

கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேச மக்களும் தமது பெயர்கள் புதிய பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தியிருந்தனர்.

இராணுவத்தினரால் தமது காணிகளை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்த தமக்கு, நலன்புரி கொடுப்பனவு விடயத்திலும் பெயர்கள் உள்ளடக்கப்படாமை குறித்து கவலை வெளியிட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முல்லைத்தீவு மாவட்ட பதில் செயலாளர் கே.கணகேஸ்வரன், தகுதியானவர்கள் உதவித்திட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள் என உறுதியளித்தார். ஜூன் 10ஆம் திகதி வரை மீண்டும் மேன்முறையீடு செய்ய முடியுமென செயலாளர் அறிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் பெறத் தகுதியுடையவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உதவி பெற தகுதியில்லாத ஒருவரின் பெயர் அல்லது குடும்பங்களின் விபரங்கள் இருந்தாலோ அது தொடர்பில் மேன்முறையீடு செய்யலாம் எனவும், ஜுலை 10ஆம் திகதி வரை மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகம் மற்றும் கிராம மட்ட அரச அலுவலகங்களிலும் அந்தப் பிரதேசத்தின் நன்மைகளைப் பெறத் தகுதியானவர்களின் பெயர்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒரு தனிநபர் அல்லது குடும்ப அலகு மேல்முறையீடு செய்ய இரண்டு வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதில் முதலாவது நலன்புரி நன்மைகள் சபையின் www.wbb.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமாக மேற்கொள்ள முடியும்.

கையால் நிரப்பப்பட்டு தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்தில் ஒப்படைப்பது இரண்டாவது முறையாகும்.

அஸ்வெசும நலனைப் பெறத் தகுதியுள்ள ஒருவரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்பதோடு அத்தகைய ஆட்சேபனைகளை அநாமதேயமாகச் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுத் தொடர்பில் எவருக்கேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் 1924 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பாதிக்கப்படக்கூடிய, ஏழைகள் உள்ளிட்ட மிகவும் ஏழ்மையான 04 சமூகப் பிரிவுகளின் கீழ் “அஸ்வெசும” நலன்புரிப் பலன்கள் வழங்கப்படும் எனவும், ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடைய  கொடுப்பனவுகள் வழமை போன்று வழங்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

மே மாதம் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கான 2,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும் வழங்கப்பட இருப்பதோடு பாதிக்கப்படக் கூடிய 400,000 பேருக்கான  5,000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகள் 800,000 பேருக்கான 8,500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 ரூபாய் கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் 3 வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் 72,000 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம்  5,000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் 39,150 பேருக்கு 5,000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறும் 416,667 பேருக்கு  2,000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.