மணிப்பூர் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

0
97
Article Top Ad
மணிப்பூர் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றாவாளி ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான  மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே கடந்த இரண்டரை மாதங்களாக வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில் இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியாகியுள்ளது.

பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோவில் காணப்பட்டவர்களில் நான்கு பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அடுத்த சில மணிநேரங்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய வலி மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ‘ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை’ என்றும் குறிப்பிட்டார்.

வீடியோவில் நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை திறந்தவெளி நிலத்திற்கு இழுத்துச் செல்லும் கூட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் காணப்பட்ட நான்கு ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோவை உறுதி செய்த மணிப்பூர் காவல்துறை தௌபல் மாவட்டத்தில் மே மாதம் 4ஆம் திகதி இந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறியுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய மத்திய பாதுகாப்புப் படையினர் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

முதல்வர் இந்தத் தகவலை வழங்கிய அடுத்த சில மணிநேரங்களில் இதுதொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வீடியோவில் கூட்டத்தை வழிநடத்துவதாகக் காணப்படும் நபரான ஹூய்ரேம் ஹெரதேஷ் சிங் முதலில் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மற்ற மூன்ற பேரின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.