இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலி 5 வருட இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டு மண்ணில் சதமடித்துள்ளார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக போர்ட் ஒவ் ஸ்பெயினில் நடைபெற்றுவரும் 2வது டெஸ்ற் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போதே கோலி சதமடித்தார்.
இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது களமிறங்கிய கோலி அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்று ஆட்டமிழந்தபோது 121 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி பேர்த் மைதானத்தில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக பெற்ற சதமே இதற்கு முன்னர் வெளிநாட்டு மண்ணில் அவர் குவித்த சதமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருட முற்பகுதியில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட்போட்டியில் 180 ஓட்டங்களைக் குவித்து சதமடித்த போது உள்நாட்டில் 4வருட இடைவெளிக்குப் பின்னர் சதமடித்திருந்த கோலி தற்போது வெளிநாட்டில் 5 வருட இடைவெளிக்குப் பின்னர் சதமடித்துள்ளார் . இது அவரது 29வது டெஸ்ற் சதமாகும்.
தனது 500வது சர்வதேசப் போட்டியில் விளையாடும் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் தான் குவித்த மொத்த சதங்களின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரித்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.