அமெரிக்க நாடாளுமன்றமான கொங்கிரஸின் பறக்கும் தட்டுக்கள் பற்றிய விசாரணைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ், வேற்றுக்கிரக அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் மற்றும் மனித உயிர் அல்லாத வேற்றுக்கிரகத்தைச்சேர்ந்த உடல்கள் மீட்கப்பட்டு அமெரிக்க அரசு மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தான் இதனை வெளியே சொன்னதற்கு தன் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறினார்.
தன்னுடன் அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்களில் சிலர், இந்த வேற்றுகிரக நடவடிக்கைகளால் உடல்ரீதியாக காயமடைந்ததாகவும் மேலும் கூறினார். ஆனால் தான் இதுவரை எந்த ஏலியன்களையும் பார்த்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவின் பென்டகன் நிர்வாகம் இவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
பூமியில் சேதத்திற்குள்ளான பறக்கும் தட்டுக்களின் பாகங்களை வைத்துக்கொண்டு அது எப்படி உருவாக்கப்பட்டதென்ற பின்நகர் பொறியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற இரகசியத் திட்டமொன்று அமெரிக்க பாதுகாப்புத்துறையினரிடம் உள்ளதாக கொங்கிரஸிற்கு முன்பாக அவர் கருத்துவெளியிட்டார்.
இவரைத்தவிர முன்னாள் கடற்படைத் தளபதி 2004 ஆம் ஆண்டு பயிற்சிப் பணியின் போது விசித்திரமான பொருளை பார்த்ததாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஓய்வுபெற்ற கடற்படை விமானி ரியான் கிரேவ்ஸ், அட்லாண்டிக் கடற்கரையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து, வேற்றுக்கிரக நடவடிக்கைகளை கண்டதாகவும்இ கூறியுள்ளது இந்த விவகாரத்தில் தற்போது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.