தாலிபான் அரச பிரதிநிதியுடன் சந்திப்பை நடத்தியுள்ள இலங்கை இராஜதந்திரி

0
78
Article Top Ad

இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவர் ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரால் ஜெயநாத் கொலம்பகே ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளரும் வெளியுறவு மக்கள் தொடர்பாடல் உதவி பணிப்பாளருமான ஹாபிஸ் ஷியா ஹமட்டுடன் இந்தனோஷியாவில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்தனோஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தச் சந்திப்பு கடந்த மாதம் 14ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

ஹாபிஸ் ஷியா ஹமட் இந்தோனிஷியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கை, சிங்கப்பூர், பங்களாதேஷ் உட்பட அந்நாட்டில் உள்ள சில முக்கிள இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை சார்பில் வைஸ் எட்மிரால் ஜெயநாத் கொலம்பகேவும் கலந்துகொண்டுள்ளார். என்றாலும், இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைத் தூதரகரம் இந்தச் சந்திப்பு குறித்து எவ்வித தகவல்களையும் பகிர்ந்திருக்கவில்லை.

இந்நிலையில், டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக ஹாபிஸ் ஷியா ஹமட் சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன், புகைப்படமொன்றையும் வெளியிட்டுள்ளார்.

வைஸ் அட்மிரல் கொலம்பகே, முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.

தாலிபான் வெளியிட்டுள்ள சந்திப்பு குறித்த புகைப்படத்தில் வைஸ் அட்மிரல் கொலம்பகேவுக்கு பின்னால் இலங்கை கொடி இருக்கின்றமை குறித்து சர்வதேச அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகத்தை இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்பதுடன், அட்மிரல் கொலம்பகே ஆப்கானிஸ்தான் தூதுக்குழுவை சந்திப்பதற்கு கொழும்பிடம் அனுமதி பெறவில்லை என வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானுடன் இலங்கை எந்த உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15, 2021அன்று தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் காபூலில் உள்ளது இலங்கை தூதரகத்தின் பணிகளை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டிருந்தது.

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் கடந்த மே 27, 2002 அன்று இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.