இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யார் இந்த இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா?
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூரைச் சேர்ந்தவர் இக்னேஷியஸ் டெலாஸ் புளோரா. 1965ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி இவர் லூர்துசாமி பிள்ளை, தெரசம்மாள் தம்பதிக்கு மகளாக பிறந்துள்ளார். இக்னேஷியஸ் டெலாஸ் புளோராவுடன் 3 சகோதரர்கள், 2 சகோதரிகள் பிறந்துள்ளனர்.
இவருடைய ஒட்டுமொத்த குடும்பமே ராணுவத்துடன் தொடர்புடையது தான். மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜான் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ராணுவத்தில் பணியாற்றிய இவரது 3வது சகோதரர் ஜார்ஜ் ராஜா, தற்போது உயிரோருடன் இல்லை. அன்னம்மாள், டெசி ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர். இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜான். ஓய்வு பெற்ற பேராசிரியராவார். இந்த தம்பதிக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
ராணுவத்தில் இணைந்தது எப்படி?
சகோதரர்கள் அனைவரும் ராணுவத்தில் இருந்ததால் சிறிய வயதில் இருந்தே இக்னேசியஸ் டெலோஸ் புளோராவிற்கும் ராணுவத்தில் சேரவேண்டும் என்ற இருந்துள்ளது.
எனவே அவருடைய மூத்த அண்ணன் அந்தோணி சாமியின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதியுள்ளார்.
அதில் தேர்வான பிறகும் கூட விடாமுயற்சியுடன் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்துள்ளார். அதன் விளைவாக தற்போது செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார். இதுபற்றி இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சகோதரர்கள் அந்தோணி சாமி ஜான் பிரிட்டோ ஆகியோர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,
‘இந்திய நாட்டிற்காக நாங்கள் பணியாற்றியதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதிலும் எங்களது சகோதரி இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் பாக்கியம் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைத்தது மிகவும் சந்தோசமாகவும்இமன நிறைவாகவும் உள்ளதுஇ’ என்றனர்.