சிங்கப்பூரின் அடுத்த ஜனாதிபதியாகப் போகும் தமிழர்! யார் இவர்?

0
192
Article Top Ad

 

சிங்கப்பூரின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னமும் ஒரு மாதத்திற்கு சற்றே அதிகமான காலப்பகுதியில் செப்டம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியாக யார் தேர்வாவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை 8 வேட்பாளர்கள் தமது ஜனாதிபதி பதவியில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். இதில் சிங்கப்பூரின் முன்னாள் துணைப்பிரதமரான தமிழர் தர்மன் சண்முகரத்தினம் முன்னணி வேட்பாளராக கருதப்படுகின்றார்.

தர்மன் சண்முகரத்தினத்தின் பின்னணி என்ன?

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார்.

ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.

தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் ,2002 ஆம் ஆண்டில்  மக்கள் செயல் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகத் தெரிவானார்.2006, 2011, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தமா சுரோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார்.

முதலில் வணிகத்துறை அமைச்சில் மூத்த மாநில அமைச்சராக நியமனம் பெற்றார். பின்னர் 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராக இருந்த இவர், 2006 மே முதல் கூடுதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 2007 இல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் கல்வி அமைச்சராகவும் மார்ச் 2008 வரையில் இருந்தார்.2011 முதல் 2019 வரை சிங்கப்பூரின் துணைப்பிரதமராகக் கடமையாற்றினார்.

ஒரு பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றினார். பல்வேறு உயர்மட்டப் பன்னாட்டுப் பேரவைகளுக்குத் தலைமை தாங்கி செயற்பட்டார்.

தர்மன் தற்போது முப்பது நாடுகள் அடங்கிய பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய பேரவையின் தலைவராக உள்ளார். ஐ.நா. தண்ணீரின் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் பன்முகத்தன்மைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

தர்மன் 2021 இல் ஜி-20 உயர்மட்ட சுயாதீனக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அனைத்துலக நாணய நிதியத்தின் முக்கிய கொள்கை மன்றமான பன்னாட்டு நாணய மற்றும் நிதிக் குழுவின் தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்த முதலாவது ஆசியத் தலைவராக ஆனார். கூடுதலாக, இவர் தற்போது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராகவும் உலகப் பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

2023 ஜுன் மாதம் 8 ஆம் திகதி அன்று  தர்மன் 2023 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஆம் திகதி அன்று ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை அறிவித்தார். அதைத் தொடர்ந்து  அரசாங்கத்தில் உள்ள அனைத்து பதவிகளிலிருந்தும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் 2023 ஜுலை 7 முதல் விலகுவதாக அறிவித்தார்.

ஆகஸ்ட் 4ம் திகதி வரையான காலப்பகுதியில் 7 பேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புக்களிலும் விமர்சகர்கள் பார்வையிலும் தர்மன் சண்முகரத்தினம் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்களைக்கொண்டிருப்பதாகச்சுட்டிக்காட்டப்படுகின்றது.