இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட அரையிறுதிகட்டத்திற்கு தகுதிபெற்றுள்ளன. இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் போட்டிகளை நாடாத்தும் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியா பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் உத்தியோகபூர்வ ஆட்ட நேர முடிவின்போது இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றிருக்காத நிலையில் பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன. இதில் 7ற்கு6 என்ற பெனால்டி உதைகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற 4வது காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் கொலம்பிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலாவது கோலை கொலம்பிய அணி 44வது நிமிடத்தில் பெற்றது .ஆனால் அடுத்த நிமிடத்திலேயே இங்கிலாந்து கோல் அடித்து சமன் செய்தது.
பின்னர் போட்டியின் 63வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்த இங்கிலாந்து அணி 2ற்கு 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இதன்படி அரையிறுதியில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் 16ம்திகதி புதன்கிழமை எதிர்கொள்ளவுள்ளது. முதலாவது அரையிறுதியில் சுவீடன் மற்றும் ஸ்பெயின் அணிகள் எதிர்வரும் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை விளையாடவுள்ளன.