கொழும்பு வரும் மற்றுமொரு சீன கடல் ஆய்வு கப்பல் : தடுத்து நிறுத்த புதுடெல்லி இராஜதந்திர நகர்வு

0
107
Article Top Ad

ஒக்டோபர் மாதம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 நிறுத்தப்படுவது குறித்து புதுடெல்லி கவலைகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய சீன கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இலங்கையின் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷி யான் 6 வருகைக்கு இலங்கை இன்னும் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷி யான் 6 நவம்பர் 2023 வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கவலைகள் குறித்து தனது நாடு அக்கறை கொண்டதாக இருக்கும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையிலேயே, சீன கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடையும் என தெரிவிகப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் போர்க்கப்பலான Hai Yang 24 கடந்த 10 ஆம் திகதி 138 பேர் கொண்ட குழுவினருடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்தது.

குவாங்சோவை தளமாகக் கொண்ட 3999 தொன் எடைகொண்ட ஷி யான் 6, தற்போது தென் சீனக் கடலில் இருப்பதுடன், தெற்கு நோக்கி பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷி யான் 6 இன் விஜயத்தின் போது, இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (NARA) இணைந்த ஆராய்ச்சியாளர்கள் கப்பலில் ஒரு அறிவியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்தக் கப்பல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இரு துறைமுகங்களில் தரித்து நின்று இலங்கை விஞ்ஞானிகள் இல்லாமல் சுமார் ஒரு மாதத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் உத்தியோகபூர்வ கருத்து எதையும் வெளியிடவில்லை. ஆனாலும், இந்தியா இந்த விவகாரத்தை இராஜதந்திர மட்டங்களில் கலந்துரையாடல்களை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் கவலைகளை நிவர்த்தி செய்வது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் கையில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிறுத்தப்பட்டது.

இந்த கப்பலின் வருகைக்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அனுமதி வழக்கப்பட்டிருந்தது.

இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சுற்றி வளைக்கும் சீனா அனைத்து பக்கங்களிலும் இராணுவ பிரசன்னத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி முதன்மையாக பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் மூலம், முக்கிய இடங்களில் அதன் செல்வாக்கு மற்றும் இருப்பை மேம்படுத்தும் திறனுடன், சீனா முதலீடுகளை செய்து வருகின்றது.

குவாட் மற்றும் பிற ஆசியான் சக்திகளை எதிர்கொள்வதற்காக எதிர்கால அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளுக்காக இந்தோ-பசிபிக் பகுதியை சீனா வரைபடமாக்குகிறது என்பது இப்போது பகிரங்கமாகியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் கொழும்பு துறைமுகத்திற்கு சீன போர் கப்பலொன்று வந்திருந்த நிலையில், அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ஷி யான் 6 வருகை குறித்து இந்தியா தற்போது வரை அமைதி காத்தாலும் குறித்த கப்பலின் வருகையை தடுத்து நிறுத்தி இந்திய மும்முரமாக செயற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனெனில் இலங்கைக்கு சீன போர் மற்றும் ஆய்வு கப்பல்கள் வருவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.