அமெரிக்காவின் எல்.என்.ஜி திட்டம் இந்தியா வசமாகிறது?

0
96
Article Top Ad

ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து இலங்கையில் முன்னெடுக்கவிருந்த எல்.என்.ஜி திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.

எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவின் வின் நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி (New Fortress Energy) நிறுவனத்துக்கு வழங்குவதற்கான முன்மொழிவுகளை 2021ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் அந்த நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட்டது.

எல்.என்.ஜி திட்டம் என்பது திரவ இயற்கை எரிவாயு முனையத்தை கரவலப்பிட்டியவில் உருவாக்குவதாகும்.

இலங்கை இரண்டு எல்என்ஜி திறன் கொண்ட 300 மெகாவாட் அளவிலான ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குகிறது.

“யுகடனவி“ எனப்படும் ஒருங்கிணைந்த சுழற்சி LNG இல் இயங்கும் திறன் கொண்டது. “சோபாதனவி“ எனப்படும் மற்றொரு 300 மெகாவாட் ஆலை இவ்வருடம் நவம்பரில் திறக்கப்படும் என கடந்த காலத்தில் அரசாங்கம் கூறியிருந்தது.

இதற்கு அப்பால் இயற்கை எரிவாயுவை கரவலப்பிடியவில் சேமித்துவைக்கும் இத்திட்டத்தை முன்னெடுக்கவே முன்னதாக அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட இருந்தது. என்றாலும், சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் இத்திட்டம் தொடரப்படவில்லை.

இத்திட்டம் தொடர்பில் 2017ல் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை இடையே முத்தரப்பு ஒப்பந்தமொன்றும் கையெழுத்திடப்பட்டிருந்தது.

அத்திட்டம் செயல்படுத்தப்படாமையால்தான் நியூ ஃபோர்ட்ரஸ் நிறுவனத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்றது. என்றாலும், அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக திட்டமும் கைவிடப்பட்டது.

கரவலப்பிட்டியவில் ஏற்கனவே, 310 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியும் இடம்பெறுகிறது. கூடுதலாக 700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமும் அரசாங்கத்திடம் உள்ளது.

இதனுடன் கொழும்பின் கரையோரத்தில் அமைந்துள்ள கடலோர திரவ இயற்கை எரிவாயு (LNG) பெறுதல், சேமிப்பு மற்றும் மறு எரிவாயு முனையத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில், இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன், இதனை இந்தியாவுக்கு வழங்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்த மாற்றங்கள் இடம்பெறுள்ளதாகவும் அறிய முடிகிறது.