பிரித்தானியாவில் போலி புகலிட கோரிக்கையார்களுக்கு உதவிய சட்டத்தரணிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முடுக்கி விடுவதாக உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மன் உறுதியளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் போலி புகலிட கோரிக்கையாளர்களுக்கு பெரும் தொகையான பணத்தைப் பெற்றுக்கொண்டு உதவிய சட்டத்தரணிகளை டெயில் மெயில் (Daily mail) அம்பலப்படுத்தியிருந்தது.
இதில் இலங்கை தமிழரான சட்டத்தரணி ஒருவரும் அடையாளம் காணப்பட்டிருந்தார், அவர் இந்திய அகதி ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோருவதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
இந்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களால் பிரித்தானியா கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
அண்மை காலமாக ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்குள் நுழையும் முயற்சியில் பலரும் தமதுயிரை பறிகொடுத்துள்ளனர்.
மேலும், சட்டவிரோத குடியேறிகளை மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிற்கு (ருவாண்டாவிற்கு) நாடு கடத்தும் முயற்சிகளையும் பிரித்தானியா மேற்கொண்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே போலி புகலிட கோரிக்கையார்களுக்கு ஆலோசனை வழங்கிய சட்டத்தரணிகள் தொடர்பிலான தகவல்களை டெயிலி மெயில் வெளியிட்டிருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணிகளை நீதியின் முன்கொண்டு வருவதற்கான முயற்சிகளை முடுக்கி விடுவதாக தெரிவித்துள்ளார்.
அதற்காக செயலணி ஒன்றையும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக சுயெல்லா பிரேவர்மன் தெரிவித்துள்ளார். சில மாதங்களாக பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வந்த புதிய பணிக்குழு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், “புகலிடக் கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளை” விட “சிறுபான்மை சட்டத்தரணிகள்” மீது உள்துறை அலுவலகம் கவனம் செலுத்துகிறது என்று சட்ட சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, போலியான புகலிடக் கோரிக்கையை முன்வைக்க ஆலோசனை வழங்கிய மூன்று சட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களில் பணியாற்றிய சட்டத்தரணிகள் இடைநீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது