13 ஐ முற்றாக அகற்றும் சட்டத்தை முடிந்தால் கொண்டு வாருங்கள்! நீங்கள் இன்னமும் திருந்தவில்லை என்பதை உலகம் அறியட்டும் என்று விமல் அணியைத் தாக்கிய மனோ

0
128
Article Top Ad

“மஹிந்த ராஜபக்ச 13 ப்ளஸ் பற்றி பேசினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க 13 மைனஸ் பற்றிப் பேசுகின்றார். நீர்  13 மைனசும் கொடுக்கக் கூடாது என்கிறீர். இதன்மூலம் இந்நாட்டு தமிழருக்கு நீர் தரும் செய்தி என்ன? நீர் கூறுவதை கேட்டுக்கொண்டு, கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு வாயை மூடிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீரா? அது ஒருபோதும் நடக்காது. அதைவிட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்தச்  சட்டமூலத்தை உமது கட்சி, நாடாளுமன்றத்தில் கொண்டு வரட்டும். அதை நாடாளுமன்றம் எப்படி எதிர்கொள்கின்றது என்பதை உலகம் அறியட்டும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், விமல் வீரவன்ச எம்.பி. தலைமையிலான உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்.பி. கெவிந்து குமாரதுங்கவை நோக்கித் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், எம்.பிக்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தலைமையிலான கட்சிகள் கூட்டாக அமைத்துள்ள உத்தர லங்கா சபாகய கட்சியின் எம்.பி. கெவிந்து குமாரதுங்கவைவிடம் மேலும் கூறியதாவது:-

“நான், பிரிபடாத இலங்கைக்குள்ளே நியாயமான தீர்வைத் தேடுகின்றேன். அதுவே எங்கள் தமிழ் முற்போக்குக்  கூட்டணியின் கொள்கை. நீங்கள் எந்தவொரு தீர்வுக்கும் தயார் இல்லை. அதுதான் உங்கள் கொள்கை. அப்படியானால் உங்களுக்கு நான் ஒரு ஆலோசனை கூற விரும்புகின்றேன்.

இந்த ப்ளஸ், மைனஸ் வெட்டிப் பேச்சுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு,  உங்கள் கட்சியின் சார்பாக, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அகற்றும் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வாருங்கள். அதை இந்த நாடாளுமன்றம் எப்படி எதிர்கொள்கின்றது, எம்.பிக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் தெரிந்துகொள்ளலாம். உலகமும் தெரிந்துகொள்ளும். அதன் பின் வருகின்ற விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம்.

உலகம் சொல்வதைக் கேட்காமல், உலகை ஒதுக்கி வைத்து, கதவுகளை மூடி வைத்து இந்த நாட்டை நடத்திய காலம் ஒன்று இருந்தது. அதனால்தான் இன்று இந்நாடு விழுந்து போய்க் கிடக்கின்றது. ஆகவே, இப்போதும் நீங்கள் திருந்தவில்லை என உலகம் அறியட்டும்.” – என்றார்.