இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கடந்த புதன்கிழமையன்று விளக்கமளித்துள்ளார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அமைச்சர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய நிதி நிலைப்படுத்துதல் நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சியை நோக்கி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழல் எதிர்ப்பு மசோதாவை ஏற்றுக்கொண்டமை உள்ளிட்ட சட்டச் சீர்திருத்தங்கள், உத்தேச உண்மையைக் கண்டறியும் பொறிமுறை மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்களை அமைச்சர் எடுத்து விளக்கியதாகக் கூறப்படுகின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக 2023 ஆகஸ்ட் 09ஆந் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கையின் முக்கிய விடயங்களை அமைச்சர் எடுத்துக்காட்டியதுடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் சுயாதீனப் பொறிமுறைகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகியவற்றின் சுருக்கமான விளக்கத்தையும் வழங்கியதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தலைவர் தாரா விஜயதிலக்க, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் தீப்தி லமாஹேவா, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அசங்க குணவன்ச மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரினால் உள்நாட்டு நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இதில் கவனிக்கத் தக்கவிடயம் என்னவென்றால் போரில் போதிக்கப்பட்டவர்களிற்காக நியமிக்கப்பட்ட இழப்பீட்டிற்கான அலுவலகம் ,காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகம் எதிலுமே தமிழர்களோ ஏனைய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களோ தலைமைப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கவில்லை என்பதாகும்.