கனடாவின் வரலாற்றில் மிகமோசமான காட்டுத்தீ பரவிவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலேயே இவ்வாறு பாரிய காட்டுத்தீ பரவியுள்ளதுடன், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு இதனால் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் இதனால் இங்கு உனடியாக அமுலாகும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவியுள்ள காட்டுத்தீயானது கனேடிய வரலாற்றில் பரவியுள்ள மிக மோசமான காட்டுத்தீ என பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆளுநர் டேவிட் தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
“கடந்த 24 மணி நேரத்தில், நிலைமை வேகமாகியுள்ளது. மேலும் வரும் நாட்களில் நாங்கள் மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம். வேகமாக காட்டுத்தீ பரவி வருவதால் நாங்கள் மாகாண அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளோம்” எனவும் ஆளுநர் டேவிட் கூறியுள்ளார்.
கெலோவ்னா நகரத்தின் எல்லையை நோக்கி காட்டுத் தீ நெருங்கிவருவதால் 15,000 பேர்வரை அங்கியிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடாவின் வடமேற்குப் பகுதியின் தலைநகர் Yellowknife நகரில் இருந்து ஒட்டுமொத்த மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் அண்டை மாகாணமான ஆல்பர்ட்டாவில் தற்காலிமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆல்பர்ட்டாவில் தங்கவைக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்துள்ளார்.
“நாங்கள் அனைவரும் சோர்வாக இருக்கிறோம். வடமேற்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த துயரமான நிலைமையை விவரிக்க முடியவில்லை. எங்கள் அண்டை மாகாணங்கள் பல நாடுகள் இந்த நிலைமையில் இருந்து மக்கள் மீண்டுவர வேண்டும்“ என பிரார்த்தனை செய்கின்றனர் ஆல்பர்ட்டா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
“காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும் கனேடிய பாதுகாப்பு படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், விமானங்கள் மற்றும் ஹெலிகப்டர்கள் ஊடாக காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என தேசிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர், வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம், கனடாவின் கிழக்கு பகுதியில் காட்டுத்தீ பரவியிருந்ததுடன், பெரும் அழிவுகளும் ஏற்பட்டிருந்தன.